சமவெளிப் பகுதியில் மிளகு சாகுபடி: சாதித்து காட்டிய விவசாயிகள்

குளிர், மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் எனக்கூறப்பட்ட மிளகை ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பியே சாகுபடி நடைபெற்று வரும் சமவெளிப்பகுதியில் பயிரிட்டு,
சமவெளிப் பகுதியில் மிளகு சாகுபடி: சாதித்து காட்டிய விவசாயிகள்

குளிர், மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் எனக்கூறப்பட்ட மிளகை ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பியே சாகுபடி நடைபெற்று வரும் சமவெளிப்பகுதியில் பயிரிட்டு, ஏக்கருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டி சாதித்துக் காட்டியுள்ளனர் ஆலங்குடி பகுதி விவசாயிகள்.
 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறுகளின் மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு நெல், வாழை, சோளம், கடலை, கரும்பு, பூ உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், மா,பலா, தென்னை, தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகளும் அதிகளவில் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 இந்நிலையில், குளிர் மற்றும் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் என்று கூறப்பட்டுவந்த மிளகை, ஆலங்குடி வட்டத்தில் வடகாடு,மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்டு, ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டி விவசாயிகள் சாதித்துக் காட்டியுள்ளனர்.
 இப்பகுதியிலுள்ள மிளகுத் தோட்டங்களில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வேளாண் ஆராய்ச்சியாளர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 மிளகு சாகுபடியில் சாதித்துக் காட்டிய வடகாடு விவசாயி க. பாலுசாமி கூறியது: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் சொந்த வேலையாக கேரளம் சென்றிருந்தபோது, அங்கிருந்து மிளகு செடிகளை வாங்கி வந்து, எனது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களில் ஊடுபயிராகப் பயிரிட்டேன்.
 அப்போது, சக விவசாயிகள் மிளகு குளிர் மற்றும் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும்,சமவெளியான வெப்பம் மிகுந்த இப்பகுதியில் விளையாது என்று தெரிவித்தனர். இருப்பினும், நான் மிளகு செடிகளைத் தொடர்ந்து பராமரித்து வந்தேன். தொடர்ந்து, 3 ஆண்டுகளில் ஒரு செடியில் இருந்து 2 கிலோ முதல் 5 கிலோ வரை மிளகு விளைந்தது. அது, பருமனாகவும், அதிக காரத்துடனும் மலைப்பிரதேசங்களை விட தரமானதாகவும் இருந்தது. இதைத்தொடர்ந்து, 36 வகையான மிளகு ரகங்களில், இப்பகுதியில் நன்றாக விளையக்கூடிய காவேரி,கரிமுண்டா, வயநாடு என்ற 3 ரகங்களைத்
 தேர்வு செய்து எனது தென்னந்தோப்பு முழுவதும் ஊடுபயிராகப் பயிரிட்டேன்.அதுவும் நன்றாக விளைந்து , ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரத் தொடங்கியது.

 இதைத்தொடர்ந்து, வடகாடு, மாங்காடு, அணவயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகு சாகுபடி செய்து நல்ல வருவாயை ஈட்டிவருகின்றனர்.இப்பகுதியில் விளையும் மிளகு தரமானதாக இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள், விவசாயிகளின் இடத்துக்கே வந்து மிளகை கொள்முதல் செய்து செல்கின்றனர் என்றார் அவர்.
 - அ. பார்த்திபன்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com