ஈரோடு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழக அரசு பெருந்துறையில், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் மூலம், பெருந்துறையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோவை பிரதான சாலையில், பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி வளாகத்தை அமைத்தது.
பெருந்துறை சிப்காட் அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு 1991 இல் வெளியிட்டது. இவ்வளாகம் பெருந்துறை, ஈங்கூர் கிராமங்களை உள்ளடக்கிய 2,710 ஏக்கர் பரப்பளவில், ரூ. 4,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, 2000 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அன்று அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த தொழிற்பேட்டை ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ. தூரமும், கோவை விமான நிலையத்திலிருந்து 80 கி.மீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 32 கி.மீ தூரத்திலும், கொச்சி துறைமுகத்திலிருந்து 290 கி.மீ. தூரத்திலும், சென்னை துறைமுகத்திலிருந்து 425 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர், காவேரி ஆற்றிலிருந்து தனியாக குழாய் மூலம் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 110 கே.வி.எஸ்.எஸ். 2 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாலைகள், மின் விளக்குகள், வடிகால் நீர் வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.
இங்குள்ள, 248 நிறுவனங்களில் 25ஆயிரம் பேர் பல்வேறு நிலைகளில் வேலை செய்கிறார்கள். துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலைகள், பீளீச்சிங் செய்யும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தனியாக குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதில், 14 சாய தொழிற்சாலைகள், பிளீச்சிங் நிறுவனங்கள் சேர்ந்து பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தினசரி 40 லட்சம் லிட்டர் கழிவு நீரை பூஜ்யம் நிலையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுகின்றன.
மேலும், தோல் தொழிற்சாலைகள் தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தினசரி 20 லட்சம் லிட்டர் கழிவு நீரை பூஜ்யம் நிலையில் சுத்திகரிப்பு செய்கின்றன.
இத்தொழில் பேட்டை மூலம் பெருந்துறை அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும், வேலைவாய்ப்பு பெற்று, தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.