அனைத்துத் தரப்பினரையும் கவரும் குமாரபாளையம் கைக்குட்டைகள்!

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் நாம் உடுத்தும் ஆடைக்கு அடுத்தபடியாக நம்முடன் எப்போதும் இருப்பது இந்தக் கைக்குட்டைகள்தான் என்றால் அது மிகையல்ல.
அனைத்துத் தரப்பினரையும் கவரும் குமாரபாளையம் கைக்குட்டைகள்!

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் நாம் உடுத்தும் ஆடைக்கு அடுத்தபடியாக நம்முடன் எப்போதும் இருப்பது இந்தக் கைக்குட்டைகள்தான் என்றால் அது மிகையல்ல.
 கைக்குட்டை என்றதும் உபயோகத்துக்கு மட்டுமின்றி, முந்தைய காலங்களில் இவை காதலின் தூதுப் பொருளாகவும் காதலர்களிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. 1986-இல் வெளியான இசை பாடும் தென்றல் படத்தில் வரும் "எந்தன் கைக்குட்டையை! யார் எடுத்தது! அன்பு காதலின் சின்னமாய்... எந்தன் காதலி தந்ததை.. என்று கைக்குட்டைக்கென்றே அப்போது பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 இந்தப் பாடல் ஒலிக்கும்போது இதன் வரிகளைக் கேட்காமல், ரசிக்காமல் இருப்பவர்கள் மிகக் குறைவு. தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக காதலின் சின்னமாய் கைக்குட்டைதான் இடம் பெற்றது எனும் இந்த வரிகள் காதலிக்காதவர்களையும் ரசிக்க வைக்கும்.
 இதன்மூலம் கைக்குட்டைகள் அன்றைய, இன்றைய காலத்தில் இளைய தலைமுறையினரிடையே புழக்கத்தில் இருப்பதை உணர முடியும். பல வண்ணங்களில், குறைந்த விலையில் தொடங்கி தரத்துக்கு ஏற்றவாறு கூடுதல் விலையிலும் கைக்குட்டைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. இத்தகைய கைக்குட்டைகளுக்கென்று பிரசித்தி பெற்ற பகுதி குமாரபாளையம். திருநெல்வேலி என்றால் அல்வா-வும், திருப்பதி என்றால் லட்டும் நினைவுக்கு வருவதுபோல, குமாரபாளையம் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது கண்கவரும் விதவிதமான கைக்குட்டைகள்தான்.
 
 இங்கு உற்பத்தி செய்யப்படும் கைக்குட்டைகள் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுவதால் கைக்குட்டை என்றாலே பல வியாபாரிகளின் நினைவுக்கு வருவது குமாரபாளையம் பகுதிதான். இங்கு விசைத்தறிகளில் அதிகளவில் கைக்குட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 கலர் கலராய் பார்த்தவுடன் ஈர்க்கும் வண்ணம், வடிவமைப்புகளில் இவை உற்பத்தி செய்யப்பட்டு, அரை டஜன், ஒரு டஜன் எனக் கட்டப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கைக்குட்டைகள் 16, 18, 19, 21 மற்றும் 23 இஞ்ச் என 5 அளவுகளில் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கைக்குட்டை உற்பத்திக்குப் பெரும்பாலும் 30, 40-ம் எண் கொண்ட பருத்தி நூல்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பருத்தி நூல்கள் ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவையாகும்.
 தமிழகத்தில் கைக்குட்டை உற்பத்தியில் சங்கரன்கோவில், குடியாத்தம், குறிஞ்சிப்பாடி, பணப்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் புகழ்பெற்று விளங்கின. தற்போது அவற்றை விஞ்சும் வகையில் குமாரபாளையத்தில் கைக்குட்டை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
 விசைத்தறிகளில் தேவைக்கேற்ப வண்ணம், தரத்துடன் முழுவதும் பருத்தி நூல்களைக் கொண்டு கைக்குட்டைகள் நெசவு செய்யப்படுகின்றன. கைக்குட்டைகளின் அளவுக்கேற்ப ஒரு டஜன் ரூ. 70 முதல் ரூ. 500 வரையில் கிடைக்கிறது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் கைக்குட்டைகள் உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 மேலும், பெண்களுக்கான பிரிண்ட் ரக கைக்குட்டைகள், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது படங்களுடன் கூடிய கைக்குட்டைகளும் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மக்களின் தேவை, ரசனைக்கேற்ப கைக்குட்டை உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிற ஜவுளிகளைப்போன்று கைக்குட்டைகளுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கிடையாது.
 இவை பிரதானமான ஆடை இல்லை. ஆனால், அதற்கு இணையான பங்களிப்பைத் தரும் துணியாக உள்ளது. ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கோட், சூட் அணிந்தாலும் ரூ.10 மதிப்புள்ள கைக்குட்டை இருப்பது அவசியம்.
 உலகில் கால்சட்டை (பேண்ட்) அணிபவர்கள் எங்கெங்கு வசித்தாலும், அவர்களுக்கு கைக்குட்டையின் தேவை உண்டு. சந்தைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் கூவிக் கூவி விற்கப்படும் கைக்குட்டையின் தேவை எப்போதும் இருந்து வருகிறது.
 அதனால் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் குமாரபாளையத்தின் பங்கும் தவிர்க்க முடியாத அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 ஆ.ராஜூ சாஸ்திரி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com