வங்கிகளின் கடன் தொல்லை!
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, வங்கிகளின் வாராக் கடன் விவகாரம் மீண்டும் நாட்டின் நிதித் துறை தொடர்பான செய்திகளை வியாபித்திருக்கிறது.
நாட்டின் மொத்த நிதியில் 70 சதவீத அளவை அரசு வங்கிகள் கையாள்கின்றன என்பதால் அவற்றின் நலன் குறித்து நாம் கவலை கொள்வது நியாயமே.
சென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கைகளையும் முழு நிதி ஆண்டு அளவிலான நிதி அறிக்கைகளையும் பொதுத் துறை வங்கிகள் வெளியிட்டு வருகின்றன.
பொதுவாகக் கூறுவதானால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும்பாலானவை நான்காம் காலாண்டில் மெச்சத் தகுந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இதற்கு முன்னர், 2001-ஆம் ஆண்டிலும் வாராக் கடன் விவகாரம் கடுமையாக இருந்தது.
வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 2000-2001 நிதி ஆண்டில் 12.04 சதவீதமாக இருந்தது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது படிப்படியாகக் குறைந்து 2008-2009 நிதி ஆண்டில் 2.45 சதவீதமாக இருந்தது.
எனினும் 2012-2013 ஆண்டிலிருந்து அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
பொதுத் துறை வங்கிகள் இதே பாதையில் தொடருமானால், நடப்பு நிதி ஆண்டின் முடிவில் வாராக் கடன் விகிதம் 6.9 சதவீதத்தை தொடும் அபாயம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆய்வு கூறுகிறது.
சர்வதேச பொருளாதார நிலையுடன் தொடர்புள்ள இந்திய தொழில் துறைகளில் தேக்கம் ஏற்பட்டிருப்பது, வாராக் கடன் விகிதம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நமது ஏற்றுமதியில் கணிசமான அளவைக் கொண்டிருக்கும் ஜவுளி, பொறியியல், தோல் ஆகிய துறைகள் இழப்பை சந்தித்திருக்கின்றன.
சர்வதேச நிலவரத்தைத் தவிர, நம் நாட்டிலேயே திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் கடனைத் திருப்பி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்று கூறுகிறது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 750 திட்டப் பணிகளைப் பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், அந்தத் திட்டங்களை நிறைவேற்ற கூடுதலாக ரூ. 1.75 லட்சம் கோடி செலவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவு கூடும்போது கடனும் கூடுகிறது; வட்டியும் கூடுகிறது.
நிலக்கரிச் சுரங்கங்களுக்குத் தடை, அதைத் தொடர்ந்து மின் திட்டங்களில் தாமதம், அதனைத் தொடர்ந்து மின் தட்டுப்பாடு, உற்பத்தி பாதிப்பு...இதெல்லாமே கணிசமான அளவில் உள்கட்டுமானத் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட தொழில்களை மீண்டும் முழு வீச்சில் செயல்படச் செய்வதிலும் அரசு தன் கவனத்தைத் திருப்பியுள்ளது ஆறுதலான விஷயம்.
இந்தப் பிரச்னையைத் துறைவாரியாக அணுகி, நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப தீர்வுகளைக் காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடனை வசூலிக்க புதிதாக 6 கடன் மீட்புத் தீர்ப்பாயங்களை அமைக்கவும் மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் விரைந்து செல்ல தொழில் துறையினருக்கு வங்கிகள் கடன் அளிப்பது மிகவும் அவசியம்.
ஆனால் அதே சமயத்தில், திரும்பச் செலுத்தப்படாத கடன்கள் பெரும் சுமையாகி, அரசு வங்கிகளை முடக்கி வைத்திருக்கின்றன.
வாராக் கடனை சமாளிக்க ஒதுக்கப்படும் தொகை என்பது வங்கிகள் தாங்களாகவே தங்களின் கால்களில் பூட்டிக் கொள்ளும் இரும்புச் சங்கிலி.
வாராக் கடனை சமாளிப்பதற்கு வங்கி வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்குவது என்பது தாற்காலிகத் தீர்வாகத்தான் இருக்க முடியும்.
வாராக் கடன் விவகாரத்தை எப்படி சமாளிப்பது என்று கண்டறிய, ரிசர்வ் வங்கி பல ஆய்வுக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்களின் அறிக்கைகளையும் பெற்றுள்ளது. ஆனால் அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதா, அதனால் ஏதாவது பலன் உண்டா என்பது இன்றைய நிலவரத்தைப் பார்த்தாலே தெரியும்.
வாராக் கடன் என்று அறிவிக்கப்பட்டுள்ள தொகை அனைத்தும் திரும்பச் செலுத்தப்படாது என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது.
சில கடன்களைத் தவிர மற்ற கடன்களைத் தகுந்த கடன் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கால அவகாசங்கள் மூலம் திரும்பப் பெறலாம் என்பதையும் பல தரப்பினர் ஏற்கின்றனர்.
என்னென்ன காரணங்களால் கடன் தொகை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்று கண்டறிந்து, அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கும் யோசனை உள்ளது. தற்போது அரசு வங்கிகள், தனியார் வங்கிகளிலுமாக வாராக் கடனாக உள்ள தொகை ரூ. 4 லட்சம் கோடி என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இதில் 70 சதவீத அளவு பொதுத் துறை வங்கிகள் அளித்ததாகும்.
தனியார் வங்கிகளில் இந்தப் பிரச்னை குறைவாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தனியார் வங்கிகள் கூடுதலாக சில்லறைக் கடன்களை வழங்குவதுதான்.
வீட்டு வசதி, வாகனம், கல்வி, தனி நபர் கடன் ஆகியவற்றில்தான் தனியார் வங்கிகள் கவனம் செலுத்துகின்றன. அதில் வாராக் கடன் பிரச்னை அவ்வளவாக இருப்பதில்லை.
நிறுவனங்களுக்கும் தொழில்களுக்கும் தனியார் வங்கிகள் கடன் வழங்குவது குறைவுதான்.
மேலும், "சமூகத் துறை கடனளிப்பு' என்கிற விளக்கத்துக்குள் அடங்கும் வேளாண் உள்ளிட்ட துறைக்கான கடன்களைத் தனியார் வங்கிகள் குறைவாகவே வழங்குகின்றன.
தனியார் வங்கிகள் வழங்குவது "தொந்தரவில்லாத' கடன்கள்.
தங்களின் நிதி ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க பொதுத் துறை வங்கிகளும் இதுபோன்ற கடன்களை அதிக அளவில் அளிக்க வேண்டும்.
தனியார் கடன் என்றாலும், பெருநிறுவனங்களுக்கு அளிக்கும் கடன் என்றாலும், அரசு வங்கிகள் அதனை அளிக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நம்பகமான பெருநிறுவனங்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு வழங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாதபோதும், கண்ணை மூடிக் கொள்வதால் யாருக்கும் எந்த நன்மையும் விளையப் போவதில்லை.
வீட்டுக் கடன் அளிக்கும்போது, கட்டுமானத்தில் ஒவ்வொரு கட்டம் பூர்த்தியாகும்போதுதான் கடன் அளிக்கப்படுகிறது. கல்விக் கடன் மொத்தமாக அளிக்கப்படாமல், ஆண்டுதோறும் கல்விக் கட்டணத்துக்கேற்ப அளிக்கப்படுகிறது. இதே முறையை தொழில் துறையினர் - பெருநிறுவனங்களுக்கான கடனளிப்பிலும் பின்பற்றலாம்.
திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
நலிவுற்ற துறைகள், சமுதாய மேம்பாடு, வேளாண் போன்ற துறைகளுக்கு வங்கிகள் அளிக்கும் கடன்களை அரசு மானியம் மூலம் சரி செய்தால் வங்கிகளின் நிதிச் சுமை குறையும்.
கொள்கை அளவிலான இந்த முடிவுகளை அரசும் வங்கிகளும் இணைந்து எடுக்க வேண்டும்.
-டி.எஸ்.ஆர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

