

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வது குறித்த பொதுமக்களிடம் நிலவி வந்த அச்சம் இப்போது வேகமாக விலகி வருகிறது. முக்கியமாக பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.
பொதுமக்களிடம் இருந்து பெருமளவில் திரட்டப்படும் நிதியை, தலை சிறந்த நிதித்துறை வல்லுநர்களின் நிர்வாகத்தின்கீழ், பங்குச் சந்தையில் முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தை, முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதே பரஸ்பர நிதி நிறுவனங்களின் செயல்பாடாகும்.
வங்கி மற்றும் அஞ்சலகங்களில் நிரந்தர வைப்பு, தொடர் வைப்புகளுக்கு அளிக்கப்படும் வட்டி வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்ட நிலையில், பெரும்பாலான மக்களின் பார்வை பரஸ்பர நிதித் திட்டங்களின் பக்கம் திரும்பியுள்ளது. கவனமாக முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வது சந்தை அபாயத்தில் இருந்து நமது பணத்தைக் காக்கும்.
நேரடியாக பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதைவிட பரஸ்பர நிதித் திட்டங்கள் மூலம் குறிப்பிட்ட வார, மாத கால இடைவெளியில் எஸ்ஐபி (Systematic Investment Plan) முறையில் பணத்தை முதலீடு செய்வதில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதே நேரத்தில், நாம் எதிர்பார்ப்பதைவிட அதிக லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான நடைமுறைகளும் இப்போது மிகவும் எளிமையாகியுள்ளன. மேலும், முதலீட்டுத் திட்டங்களை தெரிவு செய்ய பெரிய பொருளாதார அறிவும் தேவையில்லை. பரஸ்பர நிதித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
எனினும், முதல் முறையாக பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள், இதற்கென செயல்படும் நிதி ஆலோசனை நிறுவனங்கள் மூலம் அணுகுவது சிறப்பானதாக இருக்கும். இதற்கான கட்டணம் மிகவும் குறைவுதான்.
பரஸ்பர நிதியில் முதல்முறையாக முதலீட்டைத் தொடங்குபவர்கள் (கேஒய்சி) எனப்படும் வாடிக்கையாளர் அறிமுகப் படிவத்தை நிரப்ப வேண்டும். பான் கார்டு நகல், முகவரி ஆவணத்தின் நகல், புகைப்படம் ஆகியவற்றை இதில் கட்டாயமாக இணைக்க வேண்டும். இதன் பிறகு நமக்கு விருப்பமான முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்கலாம். மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை முதலீட்டுக்கு அனுப்புவதற்கான இசிஎஸ் வசதியும் பரஸ்பர நிதித் திட்டத்தில் உள்ளது.
கேஒய்சி-யை ஒருமுறை அளித்துவிட்டால், அது அனைத்து பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கும் சென்றுவிடும். அதன் பிறகு எந்த ஒரு பரஸ்பர நிதி நிறுவனத்திலும் எளிதாக முதலீடு செய்ய முடியும். நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் வழியாகவே பரஸ்பர நிதியில் முதலீடு செய்து, தேவைப்படும் போது அதனைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இத்துறை நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
இளைஞர்கள், நடுத்தர வயதை எட்டியவர்கள், 50 வயதைக் கடந்தவர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் பரஸ்பர நிதியில் உள்ளன. தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புள்ள இளைஞர்கள் முழுவதும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் தைரியமாக முதலீடு செய்யலாம் என்பதும், அதற்கு அடுத்த பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், முதலீட்டுக்குப் பாதுகாப்பான அரசுப் பத்திரங்கள், கடன் பத்திரங்களில் பாதித் தொகையும், பங்குச் சந்தையில் மீதித்தொகையும் முதலீடு செய்யும் 'பேலன்ஸ்ட் ஃபண்ட்' திட்டங்களை தெரிவு செய்யலாம் என்பதும் பொதுவான பரிந்துரையாகும்.
இது தவிர பங்குச் சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள், சிறு நடுத்தர நிறுவனங்கள், வேகமாக வளரும் நிறுவனங்கள், தங்க முதலீட்டுத் திட்டங்கள், வங்கி, நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், எஃப்எம்சிஜி எனப்படும் நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் நமது விருப்பத்துக்கு ஏற்ப முதலீடு செய்யும் வாய்ப்புகளை பரஸ்பர நிதி நிறுவனங்கள் அளித்து வருகின்றன.
பங்குச் சந்தையில் முதலீடு போல பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய அதிக பணம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாயைக் கூட முதலீடு செய்யும் வசதி உள்ளது. எனவே, குறைந்த வருவாய்ப் பிரிவினரும் இத்திட்டத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடியும்.
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதுடன் ஒப்பிடும்போது பரஸ்பர நிதித் திட்டங்களில் நாம் செலுத்தும் பணம் பரவலாக பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதால் நமது பணத்துக்கான பாதுகாப்பும், லாபமும் உறுதிசெய்யப்படுகிறது.
முதலீட்டைத் தொடங்கும்போது வசூலிக்கப்படும் 'என்ட்ரி லோடு' கட்டணத்தை இப்போது பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டன. எனினும், முதலீட்டை திரும்பப் பெறும்போது அதில் ஒரு சதவீதம் 'எக்சிட் லோடு' கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவும், பெரும்பாலும் ஓராண்டுக்குள் முதலீட்டைத் திரும்பப் பெற்றால் மட்டுமே வசூலிக்கப்படும். ஓராண்டுக்கு மேல் முதலீட்டைத் திரும்பப் பெற கட்டணம் ஏதுமிருக்காது.
இது தவிர பணத்தை நிர்வகிப்பதற்காக ஆண்டுக்கு ஒருமுறை மிகக்குறைந்த சதவீதத்தில் 'எக்ஸ்பென்ஸ் ரேஷியோ' கட்டணம் வசூலிக்கப்படும்.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) அனுமதி பெற்று இயங்குவதால், இதில் எவ்வித நிதி முறைகேடுகளுக்கும் வாய்ப்பு இல்லை.
வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில்தான் இப்போது பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் அதிக லாபத்தைத் தந்து வருகின்றன. இளைஞர்கள் மிகுந்துள்ள நமது நாட்டில் அடுத்து வரும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு பொருளாதாரம் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நமது பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்குமே தவிர பெரிய அளவில் வீழ்ச்சிக்கும், முதலுக்கு மோசம் ஏற்படவும் வாய்ப்பு குறைவு. எனவே, சேமிப்பின் ஒரு பகுதியை பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் சிறப்பான பலனை அளிக்கும்.
-சு.வெங்கடேஸ்வரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.