தாமதமும் அதிகரிக்கும் திட்டச் செலவினமும்

நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால், தொழில்கள் வளர்ச்சி அடைய வேண்டும். தொழில் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணி.
தாமதமும் அதிகரிக்கும் திட்டச் செலவினமும்
Updated on
2 min read

நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால், தொழில்கள் வளர்ச்சி அடைய வேண்டும். தொழில் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணி. தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அனைத்து வகையிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாட்டின் முக்கிய நகரங்களிலும், தொழில் நகரங்களிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சாலைப் போக்குவரத்து வசதி, ரயில் போக்குவரத்து வசதி, கடல் போக்குவரத்து வசதி, வான் வழி போக்குவரத்து வசதி, பிற தொழில் கட்டமைப்புகள் என பல்வேறு வசதிகளை காலத்துக்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தித் தர வேண்டும். அவற்றை அவ்வப்போது மேம்படுத்துவதும் அவற்றில் நவீனத்தை புகுத்த வேண்டியதும் அவசியம்.
இந்தியாவைப் பொருத்த வரையில், கடந்த பல ஆண்டுகளாக விமானப் போக்குவரத்துத் துறை, தொழில் கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதி, ரயில் போக்குவரத்து வசதி (தற்போது பொலிவுறு நகரம் திட்டம்) உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி நிலை அறிக்கைகளில் ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களைக் கவர, அந்நிய முதலீடுகளை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2018-19 நிதியாண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் ரயில்வே துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென ரூ.48,523 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, சுற்றுலாத் திட்டங்களின் மூலம் வருவாய் ஈட்ட, சுற்றுலாத் தலங்களில் பல்வேறு கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2018-19 நிதியாண்டில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கென ரூ.5.97 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கூடுதலாக ரூ. 50 லட்சம் கோடி தேவைப்படும் என நடப்பு நிதி நிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
ஒரு திட்டப் பணிக்கு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, ஒதுக்கப்பட்ட நிதிக்குள் பணிகள் முடிவடைகின்றனவா என்றால், துரதிருஷ்டவசமாக, இல்லை என்பதே பதில். முக்கால்வாசி திட்டப் பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள்ளோ, ஒதுக்கப்பட்ட நிதிக்குள்ளோ முடிவதில்லை. இந்தக் கால தாமதத்தால், கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. மக்களின் வரிப் பணமும் வீணாகிறது.
மத்திய அரசு மேற்கொண்டுவரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி திட்டப் பணிகளில் சுமார் 19 சதவிகிதப் பணிகள் கால தாமதமாக நடந்து வருகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டுத் தொகையைவிட சுமார் 13 சதவிகிதத் தொகை அதிகரித்துள்ளது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த திட்டப் பணிகள் நிறைவேற்றத்தில் ஏற்படும் கால தாமதத்தினால் கூடுதலாக ரூ. 2.23 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான புள்ளிவிவரப்படி, 1,332 அடிப்படைக் கட்டமைப்புத் திட்டப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவற்றில் 253 திட்டப் பணிகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ.16,26,675.52 கோடி. கால தாமதம் காரணமாக தற்போது இது ரூ.18,49,766.91 கோடியாக அதிகரித்துள்ளது. இத் திட்டப் பணிகள் ஒவ்வொன்றும் ரூ.150 கோடிக்கு மேலான திட்ட மதிப்பீட்டுத் தொகையைக் கொண்டவை.
கால தாமதமாகும் திட்டப் பணிகளில் முன்னிலை வகிப்பவை மின்னுற்பத்தித் திட்டப் பணிகள். மொத்தம் 114 மின்னுற்பத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் நாடு முழுவதும் 61 திட்டப் பணிகள் கால தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் நகர்ப்புற மேம்பாட்டின் கீழ் 43 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 20 பணிகள் கால தாமதமாக நடைபெற்று வருகின்றன. 
சாலை வசதி, நெடுஞ்சாலைகள் ஆகிய பிரிவுகளில் 543 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் 32 திட்டப் பணிகளே கால தாமதமாக நடைபெற்று வருகின்றன என்பது சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. 
திட்டப் பணிகளில் ஏற்படும் கால தாமதத்துக்குப் பிரதான காரணங்களாக, தொழில்நுட்பம், நிதி, நிர்வாக நடவடிக்கைகளே என்று கூறப்படுகின்றது. இது ஒருபுறமிருக்க, ஒப்பந்ததாரரின் மோசமான செயல்பாடு, சுற்றுப்புறச் சூழல் துறை அனுமதி அளிப்பதில் கால தாமதம், நிலம் கையகப்படுத்துதல் நடைமுறைகள், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஆகியவையும் காரணங்களாகின்றன. 
மேலும், கூடுதல் செலவினத்துக்கு காரணங்களாகக் கூறப்படுபவை: திட்டத்துக்கான செலவினத்தை தவறாகக் கணக்கிடுதல், அந்நியச் செலாவணியில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம், மறுவாழ்வுத் திட்டப் பணிகள், நிலம் கையகப்படுத்துவதற்கு ஆகும் செலவினம், திறமையான பணியாளர்களின் குறைபாடு, திட்டப் பணியில் அவ்வப்போது ஏற்படும் மாறுதல்கள், பணவீக்கம் இவற்றோடு கால தாமதமும் சேர்ந்து கொள்கிறது. கால தாமதத்தையும், கூடுதல் செலவினத்தையும் தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அமைச்சகங்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர் மத்திய அரசு அதிகாரிகள்.
திட்டங்கள் நிறைவேற கால தாமதத்துக்கு காரணங்கள் பல கூறினாலும், வீணாவது மக்களின் வரிப் பணமே. மேலும், ஒரு நகரின் மையப் பகுதியில் ஒரு பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்குவது முதல் அந்தப் பணி முடியும் வரை, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் சொல்லி மாளாது. இது நமது நாட்டு மனித வளத்தின் உற்பத்தித் திறனை பாதிக்கும் விஷயம் என்பதை நாம் கருதுவதில்லை. எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய கால தாமதம் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் விளங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com