ஏற்காடு காபிக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: எஸ்டேட் உரிமையாளர்கள் கோரிக்கை

நிகழாண்டில் ஏற்காட்டில் காபி விளைச்சல் 3,800 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 
ஏற்காடு காபிக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: எஸ்டேட் உரிமையாளர்கள் கோரிக்கை
Updated on
3 min read

நிகழாண்டில் ஏற்காட்டில் காபி விளைச்சல் 3,800 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 
அதேவேளையில்,  காபி கொட்டை கிலோவுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.130 முதல் ரூ.145 வரை விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில்,  கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது ஏற்காடு.  கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,326 அடி உயரத்தில் உள்ள சேர்வராயன் மலைப் பகுதியில் 1820 - 1829 ஆம் ஆண்டுகளில் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.டி.காக்பர்ன்  காபி சாகுபடியை அறிமுகப்படுத்தினார்.
ஏற்காட்டில் 5,876 ஹெக்டேர் பரப்பளவில் காபி தோட்டங்கள் உள்ளன.  இங்கு  25 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள பெரிய எஸ்டேட் உரிமையாளர்கள் 102 பேர்,  10 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் எஸ்டேட் உரிமையாளர்கள் 2,677 பேர் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் குறிப்பாக கர்நாடகம்,  கேரளம்,  தமிழகம் ஆகிய தென் மாநிலங்களில்தான்  காபி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஏற்காடு, வால்பாறை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் காபி விளைவிக்கப்படுகிறது.  இந்தியாவின் மொத்த காபி உற்பத்தியில் 7 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பாக உள்ளது.  இதில் ஏற்காடு 1 முதல் 2 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.  இங்கு அராபிகா வகை காபி தான் 99 சதவீதம் விளைவிக்கப்படுகிறது.  இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த காபி கொட்டையில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, ஜூனியர் காபி கிளப் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூறியது:
ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியில் நாகலூர், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு,  செம்மநத்தம்,  காவிரி பீக்,  கொட்டச்சேடு,  தலைச்சோலை உள்ளிட்ட  67 மலை கிராமங்களில் காபி பயிரிடப்பட்டுள்ளது.  ஓராண்டு பயிரான காபி,  நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை அறுவடை செய்யப்படுகிறது.  மற்ற கால கட்டங்களில் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆண்டு முழுவதும் செய்ய வேண்டும். அப்போதுதான் காபி சாகுபடியை அதிகரிக்க முடியும்.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கிலோ காபி கொட்டை ரூ.180 முதல் ரூ.200 வரை விலை போனது.  தற்போது காபி கொட்டையின் விலை கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை உள்ளது.  கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும்,  ஆள்கூலி,   உரம், போக்குவரத்து செலவு என பல்வேறு செலவினங்கள் கூடிவிட்டன.  விலை வீழ்ச்சியால் ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான சிறிய காபி தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.  உரங்களை மானிய விலையில் தருதல், கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்தல் உள்ளிட்டவை  மூலமே சிறிய அளவிலான எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களின் பொருளாதரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும்  நெல்,  கரும்பு,  மிளகு போல காபிக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய காபி வாரியத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். 
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் ஆலோசகர் சஞ்சய் தாஸ் கூறியது: 
உலகிலேயே மிக அதிகமாக பிரேசிலில் காபி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2 முதல் 3 சதவீதமாக உள்ளது. காபி உற்பத்தியில் விலை நிர்ணயம் செய்வது அமெரிக்கச் சந்தையாக உள்ளது. 
ஜெர்மனி மட்டுமல்ல அமெரிக்கா,  இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்காடு காபி ஏற்றுமதியாகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆள் கூலி உயர்வு,  காபி விலையில் ஏற்றத் தாழ்வு, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் காபி சாகுபடி செய்வோர் சரியான விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்,  காபி தோட்டங்களில் ஊடு பயிராக விளையும் மிளகு, லவங்கம் ஆகியவைதான் தற்போது காபி தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வருகிறது. இதுதவிர,  பல்வேறு வெளிநாட்டினர் அராபிகா வகை காபி ஏற்காடு மலைப் பகுதியில் விளைவிப்பதை அறிந்து காபி கொள்முதல் செய்ய ஆர்வம் காண்பித்து வருகின்றனர். கர்நாடகம் மற்றும் கேரளத்தில் மழை பாதிப்பு காரணமாக அங்கு காபி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் ஏற்காட்டில் விளையும் காபிக் கொட்டை கிலோவுக்கு ரூ.10 முதல் 20 வரை விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் காபி பயிரிடுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார். 
இதுதொடர்பாக, மத்திய அரசின் காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் கே.ஸ்ரீதேவி கூறியது: 
ஏற்காடு மலைப் பகுதியில் விளையும் காபி கொட்டைகள் 1996-க்கு முன்பு காபி வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து, தாராளமயமாக்கல் நடைமுறைக்கு வந்த பிறகு காபி தோட்ட உரிமையாளர்களே நேரடியாகச் சந்தையில் உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.  தற்போது ஆண்டுக்கு 3,000 டன் காபி கொட்டை உற்பத்தியாகிறது. 
இங்குள்ள காபி தோட்ட உரிமையாளர்களின் சாகுபடியை அதிகரிக்கும் சந்திரகிரி ரக காபி நாற்றுகளைப் பயிரிட ஆலோசனைகளையும்,  மறுநடவு செய்ய ஏக்கருக்கு உதவித்தொகையாக ரூ.44 ஆயிரம் வரையில் பொது பிரிவினருக்கும்,  மலைவாழ் மக்களுக்கு (எஸ்.டி.) ரூ.48 ஆயிரம் வரையும் வழங்கி வருகிறோம். நிகழாண்டில் ஏப்ரல் - மே  மாதங்களில் நல்ல மழை பெய்த நிலையில் சரியான நேரத்தில் காபி செடியில் பூக்கள் மலர்ந்தன. தற்போது காபி கொட்டைகள் நன்றாகப் பழுக்கத் தொடங்கி, அறுவடை செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டில் முன்கூட்டியே காபி பழம் அறுவடை தொடங்கியுள்ளது.  கடந்த 2017 இல் 3,000 மெட்ரிக் டன்னாக இருந்த காபி உற்பத்தி, நிகழாண்டில் 3,800 மெட்ரிக் டன்னாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம். 
அதேவேளையில்,  கடந்த ஆண்டில் காபி கொட்டை கிலோ  ரூ.120 முதல் ரூ.130 வரை விலை கிடைத்தது.  நிகழாண்டில் ரூ.130 முதல் ரூ.145 வரை விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காபி விலை நிர்ணய விவகாரத்தில் மத்திய அரசு அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com