தனிநபர் விபத்து காப்பீடு!

ஒருவரது வாழும் காலத்தை, வாழ்க்கையின் மதிப்பை அளவிட முடியாது. இன்றைய நவீன உலகில் சாலை மற்றும் ரயில் விபத்து அன்றாட நிகழ்வாக உள்ளது. பணிபுரியும் தொழிற்கூடங்களில்
தனிநபர் விபத்து காப்பீடு!
Updated on
3 min read

ஒருவரது வாழும் காலத்தை, வாழ்க்கையின் மதிப்பை அளவிட முடியாது. இன்றைய நவீன உலகில் சாலை மற்றும் ரயில் விபத்து அன்றாட நிகழ்வாக உள்ளது. பணிபுரியும் தொழிற்கூடங்களில், தொழில்நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும் விபத்து நிகழ்வது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

ஒருவர் திடீரென விபத்தில் சிக்கி உயிரிழக்கும் போது, அவரது குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்னைகள், குறிப்பாக பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். ஒரு விபத்து அந்த குடும்பத்தின் வாழ்க்கைச் சூழலையே புரட்டிப்போட்டு விடும். அவர்களது துணையின் நிலை, குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்கால கல்வி, வாழ்க்கை முறை உள்பட எல்லாவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

அதனால் ஒவ்வொரு மனிதனும் விபத்தில் சிக்காமல் இருக்க தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. விபத்துகள் ஏற்படும் சூழலில் தங்கள் குடும்பத்தை காக்க ஒரே வழி, தாங்கள் ஏற்படுத்தி வைத்துச் செல்லும் பொருளாதாரம் தான். குடும்பத்துக்கு தேவையான பொருளாதார சூழலை ஏற்படுத்த தவறியவர்கள் பொதுக்காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தனி நபர் விபத்துக் காப்பீடு எடுப்பது அவசியம். 

காப்பீட்டின் அவசியம்: விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை ஈடு செய்ய முடியாது என்றாலும், பின்னர் ஏற்படும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு தரும் இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாகும். 
வாகனக் காப்பீட்டில் வாகன உரிமையாளர் விபத்தில் இறந்தால், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1லட்சம், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ. 2 லட்சம் தனி நபர் காப்பீடாக வழங்கப்பட்டு வருவதை, ரூ.15 லட்சமாக உயர்த்தி நிர்ணயிப்பது குறித்து ஆலோசிக்க காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதிலிருந்து தனிநபர் விபத்துக் காப்பீடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறியலாம்.
விபத்தின் வகைகள்: பொதுவாக விபத்து என்றாலே சாலை, ரயில் விபத்து மட்டுமே விபத்து என்பது போல் நமக்கு தோன்றும். இயற்கைக்கு மாறாக எதிர்பாராமல் நிகழும் அனைத்தும் விபத்துகளே. பாம்புகடித்தல், மாடியிலிருந்து தவறி விழுதல், கட்டடங்கள் சரிந்து விழுதல், விலங்குகளால் தாக்கப்படுதல், மின்சாரம், மின்னல் பாய்தல், தீ விபத்து, புயல், சூறைக்காற்று, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற எதிர்பாராமல் நிகழும் அனைத்தும் விபத்துகளே. 

பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்: இந்தியாவில் யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல், ஓரியண்டல் என நான்கு அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும், 25-க்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தனி நபர் விபத்துக் காப்பீடுகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் காப்பீட்டின் பயன்கள் மற்றும் பிரீமியம் போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். 
உதாரணமாக, யுனைùட் இந்தியா நிறுவனம் அண்மையில் அறிவித்த தனி நபர் விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் குறைந்த பிரீமியத்தில் மிக அதிகளவிலான காப்பீட்டை பெற முடியும். விபத்தினால் ஏற்படும் இறப்பு, நிரந்தர ஊனம் ஆகியவற்றுக்கு தனி நபர் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை (ஓர் ஆண்டுக்கு, ஜிஎஸ்டியுடன் சேர்த்து) அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது:
காப்பீட்டுத் தொகை


பாலிசி எடுக்க தகுதி: 5 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுக்கலாம். வாகனம் ஓட்டத்தெரிந்தவர்கள் மட்டுமன்றி, வாகனம் ஓட்டத் தெரியாதவர்கள், பல தரப்பட்ட தொழிலாளர்கள், அரசு, தனியார் நிறுவன அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பாலிசியை எடுக்கலாம். நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களுக்கு பாலிசி எடுக்கலாம். ஆனால் முன்மொழிவு படிவத்தில் (புரபோசல் பாரம்) பாலிசிதாரரே கையொப்பம் இட வேண்டும். 

தேவையான ஆவணங்கள்: பாலிசி எடுக்க விரும்புவோர் அடையாள சான்றாக ஆதார் அட்டை நகலை இணைக்க வேண்டும். 5-8 வயதுக்குள்பட்டவர்கள், 65- 70 வயதுக்குள்பட்டவர்கள் பிறந்த தேதிக்காக பிறப்பு சான்றிதழ், பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றின் நகலை இணைத்தால், இழப்பீடு கோரும் காலங்களில் வயது தொடர்பான பிரச்னைகள் எழுவதற்கான வாய்ப்பு இருக்காது. மேலும் ரூ.10 லட்சம் காப்பீடு பெற விரும்புவோர் மட்டும், வருமானத்துக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

பொதுவாக காப்பீட்டு நிறுவனங்கள் மாதவருமானத்தில் 60-லிருந்து 72 மடங்குவரை பாலிசி வழங்குவது வழக்கம். அதன்படி பார்த்தால் ரூ.17 ஆயிரத்துக்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள் ரூ.10 லட்சம் காப்பீடு பெற தகுதியானவராக கருதப்படுவர். அதற்கு உரிய ஆவணங்களை வழங்க வேண்டும்.

காப்பீட்டின் பலன்கள்: வாகன விபத்தில் இறக்க நேரிட்டால் முழுமையாக இழப்பீட்டுத் தொகை கிடை க்கும். விபத்தினால் பாலிசிதாரருக்கு நிரந்தர ஊனம் (பிடிடி) ஏற்பட்டாலும் முழுமையாக இழப்பீட்டுத் தொகை கிடை க்கும். 

இழப்பீடு பெற செய்ய வேண்டியவை: இழப்பீடு பெறுவதற்கான படிவத்துடன், காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை சான்றிதழ், பாலிசிதாரரின் இறப்பு சான்றிதழ், இழப்பீடு கோருவோரின் வாரிசு சான்றிதழ், சாலை விபத்தாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் நகல், பணி நிமித்த விபத்துகளுக்கு தொழிற்சாலை/நிறுவனத்திடமிருந்து தக்க மெய்ப்பிக்கும் சான்றுகள்,வங்கி கணக்கு புத்தகம் நகல் உள்பட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

இதே போன்று மற்ற அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுத்தும் தனிநபர் விபத்து காப்பீட்டுக்கான பிரீமியம் குறித்து அட்டவணையில் காணலாம். 

தனிநபர் விபத்துக் காப்பீடு குறித்து அரசுப் பொதுக்காப்பீட்டு நிறுவன மேலாளர் ஒருவர் கூறியது: சாதாரணமாக ரூ.1000-க்கு வாங்கும் செல்லிடப்பேசிக்குகூட ரூ. 100 செலவழித்து உறை போட்டு பாதுகாக்க தயாராக இருக்கும் நாம், விலை மதிக்க முடியாத நமது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க தயக்கம் காட்டுகிறோம். 

விபத்துக் காப்பீட்டில் கட்டிய பிரீமியம் தொகை திரும்ப கிடைப்பதில்லையே, இறப்பு ஏற்பட்டால் மட்டும் தானே இழப்பீடு கிடைக்கிறது என்ற குறுகிய எண்ணம் தான் இதற்கு காரணம். நாம் இல்லாத நம் குடும்பத்தை நினைத்துப்பார்த்தால், ஒவ்வொரு மனிதரும் தனி நபர் விபத்துக் காப்பீடு எடுப்பதை தவிர்க்க மாட்டோம். தனி நபர் காப்பீடு எடுத்துக்கொள்வது மனிதர்களுக்கு ரிஸ்க்கான வேலைகளை கூட தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிவகுக்கும். 

தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசியில் வாரிசுதாரர் நியமனம் உண்டு. இயற்கையான மரணம், சுயமாக தன்னைத் தானே காயப்படுத்தி கொள்வதன் மூலம் ஏற்படும் ஊனம், தற்கொலை போன்றவற்றுக்கு இழப்பீடு கோர முடியாது. அரசு காப்பீட்டு நிறுவனங்களை போன்று, தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தனி நபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவை வெவ்வேறு பயன்களுடன், பிரீமியம் தொகை மாறுபாட்டுடன், வெவ்வேறு பெயர்களில் வழங்குகின்றன. எனவே, அரசு, தனியார் நிறுவனங்கள் ஏதாவது ஒன்றில் நமக்கு பிடித்த தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து ஒருவரது குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

மத்திய அரசின் நிநிநிலை அறிக்கையில் 10 கோடி ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 50 கோடி பேருக்கு ரூ.5 லட்சத்துக்கான இலவச மருத்துவக் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதே போன்று ஆதார் அட்டை உடைய ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.10 லட்சத்துக்கான தனி நபர் விபத்துக் காப்பீடு வழங்கினால் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றார் அவர். 

ஓரியண்டல் நிறுவனத்தில் வழங்கப்படும் தனிநபர் விபத்து காப்பீடு பிரீமியம் அட்டவனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com