

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆண்டுக்கு ரூ. 280 கோடி மதிப்பில் திராட்சை வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், உத்தரவாதமற்ற கொள்முதல் நடைமுறையால் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விதையில்லா திராட்சை மற்றும் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மண் மற்றும் நீரின் தன்மை ஆகியவற்றின் காரணமாக, தமிழகத்தில்
வேறெங்கும் இல்லாத வகையில், விவசாயிகள் சுழற்சி முறையில் அறுவடைப் பருவத்தை நிர்ணயித்து சாகுபடியில் ஈடுபட்டு வருவதால், இப் பகுதியில் ஆண்டு முழுவதும் திராட்சை அறுவடை நடைபெறுகிறது.
தொடக்கத்தில் பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சை, பச்சை விதையில்லா திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், தற்போது இந்த ரகங்களுடன் வீரிய ரக திராட்சை குச்சிகளை ஒட்டு கட்டி வளர்த்து, ஏற்றுமதி தரத்திலான திராட்சை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
80 ஆயிரம் டன் உற்பத்தி
தோட்டங்களில் ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு சராசரி 16 ஆயிரம் கிலோ வரை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுக்கு சராசரியாக 80 ஆயிரம் டன் திராட்சை அறுவடை செய்யப்பட்டு, ரூ.280 கோடி மதிப்பில் திராட்சை வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
திராட்சைப் பழம் சீசனுக்கு ஏற்ப குறைந்தபட்சம் கிலோ ரூ. 15 முதல், அதிகபட்சம் கிலோ ரூ. 100 வரை விற்பனையாகிறது. திராட்சை உற்பத்திக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு சராசரி ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
வியாபாரிகள் ஆதிக்கம்
கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் உற்பத்தியாகும் திராட்சை மதுரை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ராயப்பன்பட்டி அருகே உள்ள தனியார் ஒயின் தொழிற்சாலை மூலம் கிலோ ரூ.15 என்ற நிர்ணய விலையில் திராட்சை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் திராட்சைக்கு தனியார், கூட்டுறவு சங்கம் மற்றும் அரசு சார்பில் விற்பனை நிலையங்கள் இல்லாததால், திராட்சை கொள்முதலில் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த திராட்சைக்கு 10 முதல் 20 நாள்களுக்குப் பின்புதான் வியாபாரிகள் பணம் பட்டுவாடா செய்கின்றனர். இதனால், சந்தை நிலவரப்படி பேசி கொள்முதல் செய்த திராட்சைக்கு, பணப் பட்டுவாடாவின்போது மறுபேரம் நடத்த வேண்டிய நிலை உள்ளது என்று விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
வியாபாரிகளிடமிருந்து பணம் பட்டுவாடா பெற முடியாத விவசாயிகள், உரிய ரசீது மற்றும் ஆவணங்கள் இல்லாததால், காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுருளிப்பட்டி திராட்சை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கி. முகுந்தன் கூறியது:
திராட்சை சாகுபடியில் வேலையாள்களுக்கு கூலி தரவும், உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கும் விவசாயிகள் அன்றாடம் பணம் செலவிட வேண்டியுள்ளது. ஆனால், திராட்சை விற்பனையில் கால தாமதமான, உத்தரவாதமற்ற பணப் பட்டுவாடா முறை வழக்கத்தில் உள்ளது.
பெரிய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த திராட்சையை மதுரை, திருச்சி, கேரளம் ஆகிய இடங்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்று, சந்தை நிலவரப்படி விற்பனை செய்து, உடனுக்குடன் பணம் பெறுகின்றனர். சிறு விவசாயிகள் இந்த நடைமுறையை கையாள முடியாமல் உள்ளூர் வியாபாரிகளை நம்பி ஏமாற்றமடைகின்றனர்.
எனவே, திராட்சைக்கு சந்தை நிலவரப்படி விற்பனை விலை கிடைக்கவும், விவசாயிகளுக்குப் பணப் பட்டுவாடாவுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் வியாபாரிகளை முறையாகப் பதிவு செய்து உரிமம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் செய்த திராட்சைக்கும் பணப் பட்டுவாடாவுக்கும் ரசீது வழங்குவதை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் வணிகத் துறை சார்பில் திராட்சைக்கு கொள்முதல் நிலையம் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.