

ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு இம்மாதம் 18ம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ளது.
ஐரோப்பா ஆசியாவை சந்திக்கிறது, ஆசியா ஐரோப்பாவை சந்திக்கிறது" என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் ஆசிய ஐரோப்பிய நாடுகளின் கலாச்சார விழாவும் நடைபெற உள்ளது.
பெல்ஜியத்தின் புகழ்பெற்ற இசைக் கலைஞரான ஹானாரே டி'ஓ வின் டிஜிட்டல் இசை நிகழ்ச்சியோடு தொடங்க உள்ள விழாவில் சீனாவைச் சேர்ந்த பிரிட்ஜ்கர் பரிசு வென்ற கட்டிடக்கலைஞர், வாங் ஷு கலந்து கொண்டு ஒரு உற்சாகமான கலந்துரையாடலை நடத்த இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆசிய மற்றும் ஐரோப்பிய கலைஞர்களின் படைப்பாற்றல் திறன் சிறப்பித்துக் காட்டப்படும். மேலும் இசை, நடனம் நாடக காட்சிகள், திரைப்படக் காட்சிகள் மற்றும் புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளன.
இந்த விழாவில் சீனா, பிரான்ஸ், மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவானது ஆசியா-ஐரோப்பா அறக்கட்டளை (ASEF) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைக் கொண்ட ஃபைன் ஆர்ட்ஸ்-பிரஸ்ஸல்ஸ் மையம் ஏற்பாடு செய்துள்ளது.
12 வது ASEM உச்சிமாநாட்டில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் 20-30 செய்தி ஆசிரியர்கள் பங்கு பெறுகின்றனர்.
ASEM உச்சிமாநாட்டை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய-கொரிய உச்சிமாநாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆசியான் தலைவர்கள் கூட்டம் அக்டோபர் 19ம் நாளில் நடைபெற உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்-தென் கொரியா இடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவது குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய லட்சியமான இந்த வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் முதலில் ஆசிய நாடுகளுடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.