விஸ்வரூபமெடுக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ்!

கடன். மிகவும் பிரசித்தி பெற்ற சொல். 
விஸ்வரூபமெடுக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ்!
Updated on
3 min read

கடன். மிகவும் பிரசித்தி பெற்ற சொல். 

கடன் பலவகைப்படும். அவரவர் வருவாய்க்கும் தகுதிக்கும் ஏற்ப கடனைப் பெறுவர். சிலர் பெற்ற கடனை நேரத்தில் திருப்பிச் செலுத்துவர். சிலர் காலம் கடத்துவர். சிலர் கடனைச் செலுத்தாமலேயே காலமாகி விடுவர். திருப்பிச் செலுத்தும் உத்தேசமின்றியே கடன் பெறுவோருமுண்டு. இதுதான் இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை.

தனி நபர்கள் போலவே நிறுவனங்களும் கடன் பெறுகின்றன. கடனுக்கு அரசும் விதிவிலக்கல்ல. உலக வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்தும் பிற அயல்நாடுகளிடமிருந்தும் மத்திய, மாநில அரசுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களைப் பெற்று வட்டி செலுத்தி வருகின்றன. பெரிய நிறுவனங்கள் பொதுத் துறை வங்கிகளுக்குத் திருப்பியளிக்க வேண்டிய கடன் தொகை லட்சம் கோடிகளையும் கடந்துவிட்டது என வங்கித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

வீடு கட்ட கடன், தொழில் தொடங்க கடன், வாகனங்கள் வாங்கக் கடன் என பல வகை உண்டு. இவற்றில் ஒரு வகை அன்றாடம் தொழில் செய்வதற்கு, அதாவது, காலையில் ஒரு பொருளை வாங்கி, விற்று மாலையில் வருமானம் பார்ப்பது. நகரில்  ஒரு பகுதியில் எடுத்துக் கொண்டால், ஏராளமான ஏழைகள், அன்றாடப் பிழைப்பு நடத்துவோர் இத்தகைய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, சந்தையில் காய்கறிக் கடை, பூக்கடை, பழக்கடை, டீக்கடை வைத்திருப்போர், தள்ளுவண்டி வியாபாரம், சாலையோரக் கடை என அமைத்து, தொழில் புரிவர். இவர்களின் "முதலாளி' வட்டிக்குப் பணம் கொடுப்பவர். காலையில் ஒரு தொகையை கடனாகப் பெற்று, மாலையில் வட்டியுடன் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவர். அவர்கள் வட்டி எவ்வளவு பெறுவர் என்பது வேறு விஷயம். இவர்களுக்காக அந்தந்தப் பகுதியில் வட்டிக்குப் பணம் வழங்கும் முறைசார் நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முளைத்திருக்கும். இருந்தாலும் கூட, தனி நபர்களும் அதிக அளவில் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளும் இத்தகைய அன்றாடக் கடன்களைப் பெறுகின்றனர்.

இதுபோன்ற நிதி சுழற்சியில் சிறிய தொழில்களைச் செய்வோர் ஏராளம். இவர்களின் பொருளாதார நிலை பெரிய அளவுக்கு உயருவதற்கான வாய்ப்பு இருப்பதில்லை. ஈட்டிய வருவாயிலிருந்து வட்டியைச் செலுத்திவிட்டு சிறு லாபத்தைப் பார்க்கின்றனர். இந் நிலையில், சிறு அளவிலான கடனைப் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். அதாவது, மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் நுண் கடன் பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, நுண் கடன் பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 40 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறதாம்.

மைக்ரோ ஃபைனான்ஸ் என்பது புதிய திட்டம் அல்ல. 18-ஆம் நூற்றாண்டிலேயே இது சிறிய அளவில் புழக்கத்தில் இருந்துள்ளது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, நுண்கடன் புழக்கம் 6000 கோடி டாலர் முதல் 10000 கோடி டாலர் வரை நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. இந்த வகை நிதி அமைப்பின்கீழ் சுமார் 20 கோடி பேர் உள்ளனர். இவர்களில் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களைவிட கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். இதுபோல சிறு கடன் பெறும் "வாடிக்கையாளர்களின்' எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், லாப நோக்கமில்லாமல் செயல்படும் நிறுவனங்கள் என நிதிச் சேவையில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களும் நுண் கடன்களை வழங்கி வருகின்றன. 2016-17ஆம் நிதியாண்டு கணக்குப்படி, இப் பிரிவில் மொத்த கடன் தொகையில் வங்கிகள் வழங்கியவை சுமார் 39 சதவீதம். அதாவது, சுமார் ரூ.58,000 கோடி. வங்கி சாராத நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகை சுமார் 7 சதவீதம் (சுமார் ரூ.10,000 கோடி.) 

மைக்ரோ ஃபைனான்ஸ் அல்லது நுண்கடன் என்பது சிறிய அளவில் தொழில் செய்து வருமானம் ஈட்டுவோருக்கு வழங்கப்படும் கடனுதவியாகும். மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் இத் திட்டத்தை வங்க தேசத்தில் 1980-களில் அறிமுகப்படுத்தினார் முகம்மது யூனுஸ் என்ற பொருளாதாரத் துறை பேராசிரியர். அதாவது, அதிகமானோருக்கு சிறிய தொகையைக் கடனாக வழங்குவது இத் திட்டத்தின் நோக்கம். முதலில் ஆதரவற்ற நிலையில் உள்ள கூடை முடைவோருக்கு இக் கடன் வழங்கப்பட்டது. ஏழை மக்கள் சிறிய தொகையைக் கடனாகப் பெற்று, வருவாய் ஈட்டுவதற்கு இந்த நுண்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் இந்தப் பேராசிரியர். இதன் மூலம் குழு கடனுதவித் திட்டம் தொடங்கப்பட்டது. கிராமிய வங்கி மூலம் நுண்கடன் வழங்கப்பட்டது. பேராசிரியரின் இந்த முயற்சியானது, நாளடைவில் நல்ல பலனைத் தந்தது. இத் திட்டம் நாடு முழுவதும் பிரபலமானது. இத் திட்டத்தைக் கெüரவிக்கும் வகையில், 2005-ஆம் ஆண்டானது, உலக நுண்கடன் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. கிராம மக்களின் சமூக மேம்பாட்டுக்காக இத் திட்டம் பெரிதும் உதவியாக இருந்தது. பேராசிரியர் யூனுஸýக்கு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுத் தந்தது.

2005 முதல் 2010-ஆம் ஆண்டுகளுக்கிடையே, நுண்கடன் தொழிலானது, ஆண்டுக்கு 70 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. இக் கடன் பெறுவதில்  வாடிக்கையாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனர். இருந்தாலும், நடுத்தர, கீழ் நடுத்தரப் பிரிவு மக்கள் நுண் கடன் வழங்கும் நிறுவனங்களை அதிகம் நாடத் தொடங்கினர்.

இதனிடையே, நுண்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை வங்கித் துறையும் எளிமைப்படுத்தியது. கடன் பெறுவதற்கு உத்தரவாதம் தேவையில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. வங்கிகள் இல்லாத இடங்களில் இத்தகைய நுண்கடன் நிதி நிறுவனங்கள் சிறந்த பங்காற்றி வருகின்றன. 

மேலும், நுண்கடன் பெறுவோர், பெற்ற கடனை விரைவில் திருப்பிச் செலுத்துகின்றனர். இத்தகைய நிதியைக் கொண்டு குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்கப்படுகிறது. மேலும், இத் திட்டமானது மக்களை சேமிக்கத் தூண்டுகிறது. மேலும், நிதிப் பிரச்னையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன.

இத்தகைய நுண்கடன்கள், சுய உதவிக் குழுக்கள், கிராமிய கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன. நபார்டு வங்கியும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், அரசு சாராத தொண்டு நிறுவனங்களும் நுண்கடன் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இக் கடன் வழங்கியதில், 2017 ஜூன் முதல் 2018 ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தில் வங்கிகள் வழங்கியது 51 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியது 74 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல, லாப நோக்கமில்லாமல் செயல்படும் நிறுவனங்கள் வழங்கியது சுமார் 13 சதவீதம் அதிகரித்துள்ளது என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com