
புதிதாக தொழில் தொடங்க விரும்பும் ஒருவர், தாம் செய்யப்போகும் தொழில் என்ன? உற்பத்தி சார்ந்த தொழிலா அல்லது சேவை சார்ந்த தொழிலா? அதற்கான மூலதனம் எவ்வளவு? மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? சந்தை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது போன்றவற்றை ஆய்ந்து அறிந்து தொழிலை தொடங்க வேண்டும்.
இதில் சரியான தெளிவு இல்லாமல் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள்தான் ஆரம்பித்த வேகத்திலேயே அடங்கி விடுகின்றனர். காரணம் கேட்டால் விற்பனை வாய்ப்பு மிகவும் மந்தமாக உள்ளது. தொழிலை தொடர போதிய பணம் இல்லை. வங்கியில் கடன் கேட்டால் ஏற்கெனவே நன்றாக தொழில் செய்து வரும் நபர்களுக்குத் தான் அள்ளி, அள்ளி கொடுக்கின்றனர்; எங்களைப் போன்ற முதல் முறை தொழில் முனைவோரை கண்டு கொள்வதில்லை என்கின்ற குறைகளை தெரிவிக்கின்றனர். தொழிலையும் முறையாக கற்றுக்கொள்வது இல்லை.
முந்தைய காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இப்போது தொழில் குறித்து கற்றல் மிகவும் எளிதாகியுள்ளது. அதோடு வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களில் தொழில்கடன் பெறுவதில் உள்ள சிரமங்கள், பிரச்னைகள் மிகவும் குறைந்துள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் ஏற்படவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.
தெளிவான பார்வை அவசியம்:தொழில் குறித்த முழுமையான அறிவு, தெளிவு, தன்னம்பிக்கை உள்ளிட்டவை நிச்சயம் அவசியம். ஒரு வங்கி மேலாளரிடம் சென்று வங்கிக் கடன் கேட்கும் போது, அவர்கள் முதலில் நம்மை பரிசோதிப்பது நமது தன்னம்பிக்கையைத்தான்.
தொழில் முனைவோருக்கு தொழில் மீது ஆழமான நம்பிக்கை வேண்டும். தொழில் மீதான தெளிவான பார்வை, உறுதியான திட்டம் இருக்க வேண்டும்.
தொழிலை தேர்வு செய்தல்: ஒரு தொழிலை தேர்வு செய்துவிட்டால் தொழிலுக்கான மூலப்பொருள்கள் எங்கு கிடைக்கும்; அதற்கான தேவை எப்படி இருக்கிறது என்பதை முதலில் ஆராய வேண்டும். முடிந்தவரை மூலப்பொருள்கள் உள்ளூரிலோ, அருகிலோ இருந்தால் போக்குவரத்து செலவு கணிசமாக குறையும். பின்னர் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது. ஒவ்வொரு பகுதி மக்களின் விருப்பங்கள் எப்படி இருக்கும் என்பது போன்றவற்றை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் தொழிலை தேர்வு செய்ய வேண்டும்.
கடன் வகைகள்: ரூ. 10 லட்சம் வரையிலான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகும்.
சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசின் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (Credit Guarantee Scheme CGS) ரூ.1 கோடி வரை எந்த வித அடமானமும் இல்லாமல் கடன் தருகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும்.
சொந்த மூலதனம்: பொதுவாக எந்த தொழிலைச் செய்தாலும் சொந்த மூலதனம் மிகவும் அவசியமாகும். ரூ. 1 லட்சம் மூலதனமாக கொண்டால் வங்கிகள் ரூ.4.5 லட்சம் வரை கடன் வழங்கும்.
இல்லையென்றால் தேர்வு செய்யும் தொழில், தொழில் செய்யும் இடம், விற்பனை வாய்ப்பு உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு சில மாற்றங்களுக்கு உள்பட்டு வங்கிகள் கடன் வழங்கும்.
வங்கிக் கடன் கேட்க ஏற்ற காலம்: ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படும். குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்கள் தொழில் கடன் பெறுவதில் மிக விரைவான சேவையை பெற முடியும்.
தொழில் தொடங்க விரும்புவோர் தெளிவான திட்ட அறிக்கை, வருமான எதிர்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரை), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அரசின் மானியங்கள்: உற்பத்தி நிறுவனங்களுக்கு இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீட்டு மானியமாக வழங்கப்படுகிறது.
குறைந்த அழுத்த மின் மானியம், மதிப்பு கூட்டு வரிக்கு ஈடான மானியம், தொழில்நிறுவனங்கள் கட்டுவதற்காக வாங்கப்படும் நிலத்தினை பதிவு செய்ய பதிவுக் கட்டணம், முத்திரைத்தாள் தீர்வையில் 50 சதவீதம் வரை மானியம், வேலைவாய்ப்பை பெருக்க குறைந்தபட்சம் 25 பேரை பணியில் ஈடுபடுத்தினால் கூடுதலாக 5 சதவீத மானியம், பின்தங்கிய வட்டாரங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களின் உரிமையாளர்களாக மகளிர், பட்டியலிடப்பட்ட இனம், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் போன்றோர் இருந்தால் கூடுதலாக 5 சதவீத மானியம், சுற்றுப்புறச்சூழல் தூய்மையை காக்கும் கருவிகள் நிறுவப்பட்டால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் சான்றின் அடிப்படையில் குறிப்பிட்ட இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் மானியம், வேளாண்சார் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க மானியம் என பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படுகின்றன.
சுய தொழில் செய்வது எப்படி? வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு வங்கிகள் ரூ.5 லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது. முறையாக கடனை திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் ரூ.1.75 லட்சம் வரை மானியமாக பெறலாம்.
ஒருங்கிணைப்பு: முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியது இருந்தது. தற்போது அதை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளது அரசு. மனு செய்தாலே தேவையான அனுமதி கிடைக்கும்.
நீட்ஸ் திட்டம்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும், தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை (நீட்ஸ்) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர், சுயமாக தொழில் தொடங்க அரசு பல்வேறு மானியங்கள், சலுகைகளை வழங்கிவருகிறது.
இத்திட்டத்தின்படி உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் செய்ய முடியும். குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நடைமுறை மூலதனம் கொண்ட தொழில்கள் இதில் அடங்கும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் பெறலாம். முறையாக வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 3 சதவீதம் பின்முனை வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இலவச தொழிற்பயிற்சிகள்: ரூட்செட் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் முனைவு மேம்பாட்டுப் பயிற்சிகளை வெவ்வேறு இடங்களில் வழங்கி வருகிறது.
ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஆறு வார கால அளவு ஆகும். இந்த பயிற்சி சுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு செயற்கை வைரம் பட்டை தீட்டுதல், ஆடை வடிவமைப்பு, மோட்டார் ரீவைண்டிங், தையல், உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழுவை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
- வை. இராமச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.