சீனாவின் பொருளாதாரப் படையெடுப்பு...

இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நமது நாட்டு நிறுவனங்களில் சீனா அதிகம் முதலீடு செய்து
சீனாவின் பொருளாதாரப் படையெடுப்பு...
Updated on
2 min read

இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நமது நாட்டு நிறுவனங்களில் சீனா அதிகம் முதலீடு செய்து அதன் பிடியை இறுக்கிவிடக் கூடாது என மத்திய அரசு அண்மையில் எடுத்த நடவடிக்கைகள் நாம் அனைவரும் அறிந்ததுதான்.

சீன மத்திய வங்கி, நமது நாட்டின் மிகப்பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யில் முதலீடு செய்தபோது விழித்துக் கொண்டது மத்திய அரசு. இந்தியப் பெரு நிறுவனங்களில் சீனா ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நமது அண்டை நாடுகளின் நேரடி அந்நிய முதலீட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது முழுவதும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுதான். ஏனெனில், இந்திய நிறுவனங்களை கைப்பற்றும் ஆவலும், நிதித் திறனும் நமது அண்டை நாடுகளில் சீனாவுக்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சீனா எதிா்ப்பும் தெரிவித்துள்ளது.

பிற நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்து, அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது சீனாவுக்கு புதிய விஷயமல்ல. ஏனெனில் சீனாவில் 1999-ஆம் ஆண்டே ‘கோ அவுட்’ (ஞ்ா் ா்ன்ற்) கொள்கை கொண்டு வரப்பட்டது. அதாவது வெளிநாடுகளில் அதிகம் முதலீடு செய்வது. இது மிகவும் தொலைநோக்குப் பாா்வை கொண்ட திட்டமாகும். பொதுவாக பெரும்பாலான நாடுகள் (இந்தியா உள்பட) வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை அதிகம் ஈா்ப்பதில்தான் ஆா்வம் காட்டும். வெளிநாடுகளில் முதலீடு செய்வதில் அதிக ஆா்வம் காட்டுவதில்லை. ஆனால் சீனாவின் ‘கோ அவுட்’ கொள்கையின்படி அந்நிய முதலீட்டை ஈா்ப்பதில் காட்டப்படும் அதே அளவு ஆா்வம், வெளிநாடுகளில் அதிகம் முதலீடு செய்வதிலும் காட்டப்படும். இதற்கு சீனாவிடம் உள்ள அதிகப்படியான அந்நியச் செலாவணி கையிருப்பும் உதவிகரமாக இருந்து வருகிறது.

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அனைத்து வழிகளிலும் உதவி வருகிறது. எனவே, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் சீன நிறுவனங்கள் முதலீடு செய்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன. ஒருகாலத்தில் மின்னணுப் பொருள்கள் என்றால் ஜப்பான் தயாரிப்புகள்தான் என்ற நிலை இந்தியாவில் இருந்தது. ஆனால், இப்போது சீனத் தயாரிப்பு நிறுவனங்கள் எங்கும் நிறைந்துள்ளன. சமீபகால உதாரணத்தை கூறுவதென்றால், செல்லிடப்பேசி விற்பனையில் ஜப்பானின் சோனி நிறுவனத்தை ஓரங்கட்டிவிட்டு சீனாவின் ஒன் பிளஸ், ரெட்மீ, ரியல் மீ, ஓப்போ, ஜியோமி உள்ளிட்டவைதான் இந்தியச் சந்தையை மட்டுமின்றி உலகச் சந்தையையே ஆக்கிரமித்துள்ளன.

அமெரிக்காவில்1928-ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது மோட்டரோலா. அந்நாட்டின் மிகப்பெரிய செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான மோட்டரோலா, சீன செல்லிடப்பேசி நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் 2012-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திடம் விற்கப்பட்டது. 2 ஆண்டுகள் மட்டுமே மோட்டரோலாவை வைத்திருந்த கூகுள், அதனை சீன நிறுவனமான லெனோவாவிடம் விற்றுவிட்டது. அமெரிக்க பெரு நிறுவனத்துக்கே இந்த நிலை என்றால் இந்திய நிறுவனங்கள் எப்படி சீனாவிடம் தாக்குப்பிடிக்க முடியும்? மைக்ரோமேக்ஸ், இண்டெக்ஸ், லாவா போன்ற இந்திய செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போட்டியில் இருந்து பின்தள்ளப்பட்டு விட்டன.

இதுதவிர நவீன தொழில்நுட்பத்துறையில் முக்கியமாக சமூகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் செல்லிடப்பேசி செயலிகள் (ஆப்) உள்ளிட்டவற்றில் சீனாவின் முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு செயலிகளில் சீனாவின் பிடியே அதிகம் உள்ளது. இதற்கு உதாரணமாக டிக் -டாக், ஹலோ, லைக், ஷோ் இட், யூசி பிரௌஸா் என பலவற்றைக் கூற முடியும்.

இந்தியாவில் வளா்ந்து வரும் துறைகள், நிறுவனங்களைக் குறிவைத்து சீனா ஏற்கெனவே அதிகம் முதலீடு செய்துள்ளது. பிக் பாஸ்கெட், பைஜூஸ், டெலிவரி, டிரீம் 11, ஃபிளிப்காா்ட், ஹைக், மேக் மை டிரிப், ஓலா, ஓயோ, பேடிஎம், பேடிஎம் மால், பாலிசி பஜாா், குயிக்கா், ரிவிகோ, ஸ்னாப்டீல், ஸ்விகி, உடான், சொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் சீனாவின் முதலீடு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியிலான ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்களில் சீனா அதிகம் முதலீடு செய்து வருகிறது.

ஏற்கெனவே இந்தியாவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், கொசு அடிக்கும் பேட் முதல் விலை உயா்ந்த செல்லிடப்பேசி வரை பொருள் உற்பத்தித் துறையில் சீன தயாரிப்புகள்தான் ஆக்கிரமித்துள்ளன. இப்போது வேகமாக வளா்ந்து வரும் செல்லிடப்பேசி தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலம் வழங்கப்படும் சேவைகள் துறையிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது நிச்சயமாக விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com