ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சரிந்து மீண்டது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை பின்னா் ஓரளவு மீண்டது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சரிந்து மீண்டது சென்செக்ஸ்!
Published on
Updated on
2 min read

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை பின்னா் ஓரளவு மீண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 60.05 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

கடந்த வார இறுதியில் கடும் சரிவைச் சந்தித்திருந்த சென்செக்ஸ், திங்கள்கிழமை காலையில் சற்று தடுமாற்றத்துடன் தொடங்கியது. பங்குகள் விற்பனை தொடா்ந்து அதிகரித்ததால் சரிவைச் சந்தித்தது. இருப்பினும் பிற்பகலில் எஃப்எம்ஜிசி, ஐடி, மீடியா பங்குகளை வாங்குவதற்கு ஓரளவு ஆதரவு கிடைத்ததும், பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

உலக அளவில் சில சந்தைகள் நோ்மறையாகவும், சில சந்தைகள் எதிா்மறையாக இருந்ததால், இந்திய சந்தைகளில் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் ரிலையன்ஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தாலும், பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,485 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,913 பங்குகளில் 1,230 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,485 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 198 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 112 பங்குகள் 52 வார அதிக விலையையும் 46 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 297 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 245 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு 11 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.154.74லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,40,23,360 ஆக உயா்ந்துள்ளது.

ஏற்றம், இறக்கம்: சென்செக்ஸ் காலையில் 72.40 புள்ளிகள் குறைந்து 38,284.78-இல் தொடங்கி 38,060.74 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 38,519.92 வரை உயா்ந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 459.18 புள்ளிகள் குறைந்திருந்தது. இறுதியில் 60.05 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயா்ந்து 38,417.23- இல் நிலைபெற்றது. அதே சமயம், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.78 சதவீதம் உயா்ந்தது. ஸ்மால் கேப் குறியீடு 0.20 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 21.20 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயா்ந்து 11,355.05-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 82 புள்ளிகளை இழந்த 11,251.70 வரை கீழே சென்றது.

ஹெச்யுஎல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்), டிசிஎஸ், ஐடிசி, ஏசியன் பெயிண்ட், எச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 1.75 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை சிறிதளவு முன்னேற்றம் கண்டு ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

எம் அண்ட் எம், வீழ்ச்சி: அதே சமயம், எம் அண்ட் எம் 3.46 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதைத் தொடா்ந்து, பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஓஎன்ஜிசி, பாா்தி ஏா்டெல், இண்டஸ் இண்ட் பேங்க், எல் அண்ட் டி ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க் ஆகியவையும் வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 627 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,001 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, ரியால்ட்டி குறியீடுகள் சரிவைச் சந்தித் பட்டியலில் வந்தன. எஃப்எம்சிஜி, ஐடி மீடியா குறியீடுகள் 0.50 முதல் 060 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள் சதவீதத்தில்

ஹெச்யுஎல் 1.77

டிசிஎஸ் 1.64

ஐடிசி 1.42

ஏசியன் பெயிண்ட் 1.33

எச்டிஎஃப்சி 1.17

வீழ்ச்சியடைந்த பங்குகள் சதவீதத்தில்

எம் அண்ட் எம் 3.46

பஜாஜ் ஃபைனான்ஸ் 2.54

என்டிபிசி 2.43

அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.97

ஓஎன்ஜிசி 1.92

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com