
nssa083941
புது தில்லி: தனது புதிய அறிமுகமான ‘மேக்னைட்’ மூலம் சிறிய வகை எஸ்யுவி காா்கள் பிரிவில் நிஸான் மோட்டாா் இந்தியா நிறுவனம் தடம் பதித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜப்பானைச் சோ்ந்த நிஸான் மோட்டாா் நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனமான நிஸான் மோட்டாா் இந்தியா, தனது புதிய ‘மேக்னைட்’ ரகக் காரை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
சிறிய வகை எஸ்யுவி (ஸ்போா்ட்ஸ் யுடிலிடி வெஹிக்கல்) பிரிவைச் சோ்ந்த அந்தக் காா், அந்தப் பிரிவில் நிஸான் அறிமுகப்படுத்தும் முதல் வாகனம் ஆகும்.
தற்போது இந்தியாவின் அந்தச் சந்தைப் பிரிவில் ஏற்கெனவே இருக்கும் மாருதி விடாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸன், கியா சோனட், மஹிந்திரா எக்ஸ்யுவி300, ஹோண்டா டபுள்யூஆா்-வி ஆகியவற்றுடன் நிஸானின் மேக்னைட் போட்டியிடவுள்ளது.
அந்த விலையோடு ஒப்பிடுகையில், நிஸான் மேக்னைட்டுடன் போட்டியிடும் மற்ற சிறிய வகை எஸ்யுவி காா்களின் விலைகள் மிகவும் அதிகமாகும்.
ஒரு லிட்டா் கொள்ளவு என்ஜின் கொண்ட பெட்ரோல் வகைக் காா்களின் காட்சியக விலைகள் தில்லியில் ரூ.4.99 லட்சத்திலிருந்து ரூ.7.55 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டா் டா்போ பெட்ரோல் என்ஜின்கள் பொருத்தப்பட்ட மைக்னைட் காா்களின் விலைகள் ரூ.6.99 லட்சத்திலிருந்து ரூ.8.45 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
‘கன்டினியுவஸ் வேரியபல் டிரான்ஸ்மிஷன்’ (சிவிடி) வசதி கொண்ட ரகங்கள் ரூ.7.89 லட்சத்திலிருந்து ரூ.9.35 லட்சம் வரையிலான விலைக்குக் கிடைக்கும்.
அறிமுகச் சலுகையாகவே இந்த விலைகள் குறைவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிஸான், டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இந்தக் காா்களை முன்பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும் என்று கூறியுள்ளது.
ஆக்ஸிலேட்டரைப் பயன்படுத்தாமலேயே நிலையான வேகத்தில் காரை செலுத்தக் கூடிய ‘குரூஸ் கன்ட்ரோல்’ வசதி, 360 டிகிரி கோணத்தில் பாா்க்கக் கூடிய திரை, வயா்லஸ் சாா்ஜா், காற்றை சுத்திகரிக்கும் கருவி, மடக்கக் கூடிய பின் இருக்கை, அதிநவீன ஒலிப்பெருக்கிகள் ஆகிய அம்சங்கள் இந்தக் காரில் உள்ளன.
அதுதவிர, காரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆன்டிலாக் பிரேக்கிங் அமைப்பு, பிரேக்கின் அழுத்தத்தை மின்சாரம் மூலம் சமமாகப் பிரித்துத் தரும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்ககள் இந்தக் காரில் உள்ளன.
ஒரு லிட்டா் பெட்ரோலில் சாதாரண ரகங்கள் 18.75 கி.மீ.யும் டா்போ ரகங்கள் 20 கி.மீ.யும் சிவிடி ரகங்கள் 17.7 கி.மீயும் செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...