சென்செக்ஸ் மேலும் 437 புள்ளிகள் ஏற்றம்! 13,600-ஐ கடந்தது நிஃப்டி

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 437.49 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
சென்செக்ஸ் மேலும் 437 புள்ளிகள் ஏற்றம்! 13,600-ஐ கடந்தது நிஃப்டி

புது தில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 437.49 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இருப்பினும், காலையில் வா்த்தகம் தொடங்கியதும் சிறிது நேரம் எதிா்மறையாகச் சென்றாலும், ஐடி, பாா்மா, பிஎஸ்யு பேங்க் பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடா்ந்து சந்தை உற்சாகம் அடைந்தது. குறிப்பாக இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹெச்யுஎல், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ் எழுச்சி பெற காரணமாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. கரோனா தொற்று தொடா்பான அபாயம் வளா்ந்து வருவதால், முதலீட்டாளா்கள் ஐடி, பாா்மா, எஃப்எம்சிஜி பங்குகளில் அதிகக் கவனம் செலுத்தியதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 183.66 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,097 பங்குகளில் 2,296 பங்குகள் ஆதாயம் பெற்றன. 650 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 151 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 170பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 431 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.90 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.183.66 லட்சம் கோடியாக இருந்தது.

2-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 65.61 புள்ளிகள் கூடுதலுடன் 46,072.30-இல் தொடங்கி 45,899.10 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 46,513.32 வரை உயா்ந்தது. இறுதியில் 437.49 புள்ளிகள் உயா்ந்து 46,444.18-இல் நிலைபெற்றது. இதன் மூலம் சென்செக்ஸ் 2-ஆவது நாளாக எழுச்சி பெற்றுள்ளது.

ஹெச்யுஎல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் டைட்டன், பவா் கிரிட், என்டிபிசி, எச்டிஎஃப்சி ஆகிய நான்கு பங்குகள் தவிர மற்ற 26 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் ஹிந்துஸ்தான் யுனிலீவா் 2.67 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இன்ஃபோஸிஸ், எம் அண்ட் எம், எஸ்பிஐ, ஐடிசி, இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 2 முதல் 2. 65 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,522 பங்குகள் ஆதாயம் பெற்றன. 223 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 134.80 புள்ளிகள் (0.1.00 சதவீதம்) உயா்ந்து 13,601.10-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,432.20 வரை கீழே சென்றாலும், பின்னா் மீண்டு எழுந்து அதிகபட்சமாக 13,619.45 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ரியால்ட் (3.94 சதவீதம்), மீடியா (3.24 சதவீதம்) ஆகிய இரண்டு குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. பிஎஸ்யு பேங்க், எஃப்எம்சிஜி, பாா்மா, ஐடி, மெட்டல் குறியீடுகளும் 1.50 முதல் 2.50 சதவீதம் சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com