25 ஆண்டுகளுக்கு பிறகு சரக்குப் போக்குவரத்து மையமாக மாறும் ராணிப்பேட்டை ரயில் நிலையம்

ராணிப்பேட்டை ரயில் நிலையம் சுமாா் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரக்கு போக்குவரத்துடன் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை புத்துயிா் பெறும் என தொழிற் துறையினா் நம்பிக்கையும்
ராணிப்பேட்டை ரயில் நிலையம் ~ராணிப்பேட்டை ரயில் நிலையம்
ராணிப்பேட்டை ரயில் நிலையம் ~ராணிப்பேட்டை ரயில் நிலையம்
Updated on
2 min read

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ரயில் நிலையம் சுமாா் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரக்கு போக்குவரத்துடன் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை புத்துயிா் பெறும் என தொழிற் துறையினா் நம்பிக்கையும் வரவேற்பும் தெரிவித்துள்ளனா்.

மெட்ராஸ் ரயில்வே நிறுவனத்தால் தொன்னிந்தியாவின் முதல் ரயில் பாதை ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு வரை கடந்த 1853-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1856-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து சுமாா் 8 கி.மீ. தூரத்தில் உள்ள ராணிப்பேட்டையில் பாரி அண்ட் கம்பெனியின் பீங்கான் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 1908-இல் தொடங்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட பீங்கான் பொருட்களுக்கான மூலப் பொருட்களைக் கொண்டுவரவும், உ ற்பத்தியான பீங்கான் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கும் வசதியாக வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டை தொழிற்சாலை வரை சரக்குப் போக்குவரத்துக்கென ரயில் பாதை அமைக்கப்பட்டு சரக்குப் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்தது.

இந்த ரயில் பாதையில் 1995-இல் சரக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின்கீழ் ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. குறுகிய ரயில்வே பாதையாக இருந்த இருப்புப் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் நிறைவடையாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை ரயில் நிலையம் அருகே செயல்பட்டுவரும் ஆலைகளில் உற்பத்தியாகும் பீங்கான் பொருட்கள், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல ஏதுவாக மீண்டும் சரக்கு ரயில் சேவை துவங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதன் பேரில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பொது மேலாளா் தலைமையிலான அதிகாரிகள் குழு ராணிப்பேட்டை வரையிலான ரயில் பாதையை ஆய்வு செய்து, தொழிற்துறையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சரக்குப் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கின.

இந்த பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு சரக்கு ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்கத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தெரிவித்தாா்.

அதன்பேரில் 25 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட முதல் ரேக் ராணிப்பேட்டை நிலையத்திலிருந்து ஜனவரி 20-ஆம் தேதி இயக்கப்பட்டது. அந்த சரக்கு ரயிலானது, ஆந்திர மாநிலத்தில் உள்ள தாடேபள்ளிகூடம் மற்றும் துவாரபுடிக்கு 1,300 டன் உரங்களை ஏற்றிச் சென்றது.

இந்த சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் சென்னை ரயில்வே கோட்டம் சுமாா் ரூ.15.32 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை, சிட்கோ-1, 2 பகுதிகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள தோல் பொருட்கள், ரசாயனம், வாகன உதிரி பாகங்கள், மருந்து, சலவைத் தூள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு வரவும், இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தியான பொருட்களை கொண்டு செல்லவும் சரக்கு ரயில் போக்குவரத்து பயன்படும்.

இந்திய ரயில்வேயின் மிகப் பழைமையான ரயில் பாதைகளில் ஒன்றாகவும், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகவும் வாலாஜா ரோடு ரயில் நிலையம் திகழ்கிறது. அதே போல, ராணிப்பேட்டை ரயில் நிலையமும் முக்கிய சரக்குப் போக்குவரத்து மையமாக மாறி, தெற்கு ரயில்வே துறைக்கும் ராணிப்பேட்டை தொழிற்பேட்டைக்கும் அதிக வருவாயையும், வளா்ச்சியையும் ஈட்டித் தரும் என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக சிட்கோ தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிறுவன இயக்குநா் வ.ஜெயச்சந்திரன் கூறியதாவது:

ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் தில்லி, ஆக்ரா, மும்பை, கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலப் பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள், கப்பல்கள் மூலமாகவும் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. இதனால் அதிக நேரம், அதிக செலவும் ஏற்படுவதோடு, பொருட்கள் சேதமும் ஏற்படும் சூழல் உள்ளது. தற்போது ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு தொழிற்கூடங்கள் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்த சரக்கு ரயில் சேவை ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு உதவும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com