
சமூக ஊடகங்களில் சாதாரண பதிவுகளை காட்டிலும் சர்ச்சைக்குரிய பதிவுகளே வேகமாக பகிரப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து ஆய்வின் இணை ஆசிரியர் இவான் கரிபே கூறுகையில், “ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மொத்தம் 47,000 பதிவுகளில் சர்ச்சைக்குரியவை 23,000 பதிவுகள், சர்ச்சை அல்லாத 24,000 பதிவுகளாகும்.
அந்த இரண்டு விதமான பதிவுகளில் மக்களால் அதிகம் பகிரப்பட்டவை அல்லது கமெண்ட் செய்யப்பட்டவை குறித்து ஆய்வு செய்ததில், சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு 60,000-க்கும் அதிகமான கமெண்ட்களும், சர்ச்சை அல்லாத பதிவுகளுக்கு 25,000-க்கும் குறைவான கமெண்ட்களும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சர்ச்சை அல்லாத பதிவுகளை காட்டிலும், சர்ச்சைக்குரிய பதிவுகள் இரு மடங்கு பார்க்கப்பட்டுள்ளதாகவும் பகிரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துகள் அல்லது உண்மைக்கு புறம்பாக திரிக்கப்பட்ட கருத்துகள் அதிகளவில் பரவுவதன் மூலம் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் மக்களை அந்த கருத்து எளிதாக நம்ப வைக்கும் என்ற அபாயம் உருவாகியுள்ளது.
இதுபோன்ற பதிவுகள் பரவுவதன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு நன்மை பயக்குமே தவிர, மக்கள் எளிதில் பிளவுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் இந்த ஆய்வின் அடுத்த கட்டம், இதுபோன்ற சர்ச்சையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மொழியைப் பகுப்பாய்வு செய்வதும், அது ஏன் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்க்கிறது என்பதும் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.