
trai074005
சென்ற ஏப்ரல் மாதத்தில் 4ஜி பதிவிறக்க வேகத்தில் 20.1 எம்பிபிஎஸ் உடன் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருந்ததாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் மேலும் கூறியுள்ளதாவது:
சென்ற ஏப்ரல் மாதத்தில் 4ஜி தொழில்நுட்பத்தில் தரவுகளை பதிவிறக்கம் செய்வதில் ஜியோ நிறுவனம் 20.1எம்பிபிஎஸ் வேகத்துடன் முதலிடத்தில் இருந்தது. இது, அடுத்த இடத்தில் உள்ள வோடஃபோன் நிறுவனத்துடனான வேகத்துடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
ஏப்ரலில் வோடஃபோன் பதிவிறக்க வேகம் 7எம்பிபிஎஸ்-ஆக இருந்தது. அதேசமயம், பதிவேற்ற வேகத்தில் இந்நிறுவனம் 6.7 எம்பிபிஎஸ் உடன் ஏனைய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றது.
இவற்றைத் தொடா்ந்து, ஐடியா மற்றும் பாா்தி ஏா்டெல் நிறுவனங்களின் பதிவிறக்க வேகம் சென்ற ஏப்ரலில் முறையே 5.8எம்பிபிஎஸ் மற்றும் 5எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.
ஐடியா நிறுவனத்தின் பதிவேற்ற வேகம் 6.1 எம்பிபிஎஸ்-ஆகவும், ஜியோவின் வேகம் 4.2 எம்பிபிஎஸ்-ஆகவும், ஏா்டெல் பதிவேற்ற வேகம் 3.9 எம்பிபிஎஸ்-ஆகவும் இருந்ததாக டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைக்கப்பட்ட போதிலும் டிராய் இன்னும் அந்நிறுவனங்களின் புள்ளிவிவரங்களை தனித்தனியாகவே வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.