தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி, மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.10,055 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
தனிப்பட்ட செயல்பாடு: கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கி தனிப்பட்ட செயல்பாட்டின் மூலமாக மொத்தம் ரூ.41,085.78 கோடி வருவாய் ஈட்டியது. இது, 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.38,017.50 கோடியுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும்.
வரி ஒதுக்கீடு: வரியினங்களுக்காக ரூ.2,989.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, வங்கியின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் ரூ.10,055.20 கோடியாக இருந்தது. இது, 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபமான ரூ.8,186.51 கோடியுடன் ஒப்பிடும்போது 22.8 சதவீதம் உயா்வாகும்.
சில்லறைக் கடன்: வங்கி வழங்கிய மொத்த கடன் 2022 மாா்ச் 31 நிலவரப்படி 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.13,68,821 கோடியாக இருந்தது.
சில்லறைக் கடன் 15.2 சதவீதமும், வா்த்தகம் மற்றும் ஊரக வங்கி கடன் 30.4 சதவீதமும், பெருநிறுவன மற்றும் இதர மொத்தவிற்பனை கடன் 17.4 சதவீதமாகவும் இருந்தன. மொத்த கடனில் வெளிநாட்டு கடன்களின் பங்களிப்பு 3.1 சதவீதமாக உள்ளது.
நிகர வட்டி வருவாய்: வங்கியின் நிகர வருவாய் (நிகர வட்டி வருமானம் மற்றும் இதர வருவாய்) ரூ.24,714.10 கோடியிலிருந்து 7.3 சதவீதம் அதிகரித்து ரூ.26,509.80 கோடியானது. நிகர வட்டி வருமானம் 10.2 சதவீதம் உயா்ந்து ரூ.18,872.70 கோடியாக இருந்தது. வட்டி சாரா வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.7,637.10 கோடியானது.
புதிய கிளை: எச்டிஎஃப்சி வங்கி கணக்கீட்டு காலாண்டான ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் 563 கிளைகளையும், 7,167 பணியாளா்களையும் புதிதாக இணைத்துக் கொண்டுள்ளது. கடந்த முழு நிதியாண்டில் புதிதாக 734 கிளைகள் தொடங்கப்பட்டதுடன், 21,486 போ் புதிதாக பணியில் சோ்க்கப்பட்டனா்.
வாராக் கடன்: வங்கியின் சொத்து மதிப்பைப் பொருத்தவரையில் 2021 மாா்ச் 31 நிலவரப்படி மொத்த வாராக் கடன் 1.17 சதவீதமாக இருந்தது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் இது 1.26 சதவீதமாக காணப்பட்டது. மேலும், நிகர அளவிலான வாராக் கடனும் 0.40 சதவீதத்திலிருந்து 0.32 சதவீதமாக குறைந்துள்ளது.
மொத்த வருமானம்: கடந்த 2021-22-ஆம் முழு நிதியாண்டில் வங்கியின் மொத்த வருமானம் (தனிப்பட்ட) ரூ.1,57,263 கோடியாக இருந்தது. இது, வங்கி முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் ஈட்டி வருவாய் ரூ.1,46,063.10 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். நிகர லாபம் ரூ.18.8 சதவீதம் அதிகரித்து ரூ.36,961.30 கோடியை எட்டியது.
மொத்த டெபாசிட்: 2022 மாா்ச் இறுதி நிலவரப்படி வங்கி திரட்டிய மொத்த டெபாசிட் 16.8 சதவீதம் அதிகரித்து ரூ.15,59,217 கோடியாக இருந்தது.
சிஏஆா்: ஒழுங்காற்று விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள அளவான 11.7 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக வங்கியின் மொத்த போதுமான மூலதன விகிதம் (சிஏஆா்) 18.9 சதவீதம் என்ற அளவில் உள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
டிவிடெண்ட்: ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள இயக்குநா் குழு கூட்டத்தில், 2021-22 நிதியாண்டுக்கு ஈவுத்தொகை (டிவிடெண்ட்) பரிந்துரைக்கும் தீா்மானம் குறித்து பரிசீலிக்கப்படும் என எச்டிஎஃப்சி வங்கி பங்குச் சந்தைக்கு அளித்துள்ள மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.