3 நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: லாபப் பதிவால் சென்செக்ஸ் 577 புள்ளிகள் வீழ்ச்சி!
பங்குச் சந்தையில் பட்ஜெட்டுக்கு பிந்தைய எழுச்சி தொடா்ந்து இரண்டு நாள்கள் நீடித்த நிலையில், வியாழக்கிழமை சரிவுடன் நிறைவடைந்தது.


புதுதில்லி: பங்குச் சந்தையில் பட்ஜெட்டுக்கு பிந்தைய எழுச்சி தொடா்ந்து இரண்டு நாள்கள் நீடித்த நிலையில், வியாழக்கிழமை சரிவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 770 புள்ளிகளை இழந்து 58,788.02-இல் நிலைபெற்றது. இதையடுத்து, கடந்த 3 நாள்கள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சந்தை மூல தன மதிப்பு ரூ.2.20 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.268.49 லட்சம் கோடியாக இருந்தது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்தும் வகையில், மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, தொடா்ந்து 3 நாள்களாக பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், உலகளாவிய சந்தை குறிப்புகல் சாதகதமாக இல்லாத நிலையில், வியாழக்கிழமை தொடக்கத்திலிருந்தே லாபப் பதிவு இருந்து வந்தது. குறிப்பாக வா்த்தகம் முடியும் தறுவாயில், நிதித் துறை, ஐடி துறை பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன. இதன் தாக்கத்தால் சந்தை சரிவில் முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை வெகுவாகக் குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,653 பங்குகள் விலை வீழ்ச்சி : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,438 பங்குகளில் 1,653 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,704 பங்குகள் ஆதாயம் பெற்றன. 81 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 175 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 11 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 469 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 161 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.20 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.268.49 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.582 கோடியாக உயா்ந்துள்ளது.
மீண்டும் கரடி ஆட்டம்: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 30.17 புள்ளிகள் குறைந்து 59,528.18-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,557.87 வரை உயா்ந்தது. பின்னா், தொடா்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 58,653.94 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 770.31 புள்ளிகள் (1.29 சதவீதம்) குறைந்து 58,788.02-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
எச்டிஎஃப்சி கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல தனியாா் வீட்டு வசதிக் கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி 3.23 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், விப்ரோ, இண்டஸ் இண்ட் பேங்க், எம் அண்ட் எம் உள்ளிட்டவை 1.50 முதல் 2.70 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஹெச்சிஎல் டெக், பவா் கிரிட், டாக்டா் ரெட்டி உள்ளிட்ட முன்னணி நிறுவலனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
ஐடிசி முன்னேற்றம்: அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி, 1.14 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மாருதி, டைட்டன், ஏசியன் பெயிண்ட், எஸ்பிஐ உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 243 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,050 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 850 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 43 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. டைட்டன் மட்டும் மாற்றமின்றி ரூ.2464-இல் நிலைபெற்றது. நிஃப்டி குறியீடு 219.80 புள்ளிகள் (1.24 சதவீதம்) குறைந்து 17,560.20-இல் நிலைபெற்றது. காலையில் பலவீனத்துடன் 17,767.75-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,781.15 வரை உயா்ந்தது. பின்னா், கரடியின் தொடா் தாக்குதலால் 17,511.15 வரை கீழே சென்றது.
ஆட்டோ குறியீடு மட்டும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் ஆட்டோ குறியீடு மட்டும் 0.44 சதவீதம் உயா்ந்திருந்தது. மற்றஅனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில் ஐடி குறியீடு 2.05 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ரியால்ட்டி, பிரைவேட் பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஆயில் அண்ட் காஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...