சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

சென்செக்ஸ் 634 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கரடியின் பிடி மேலும் இறுகியது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான

News image

கோப்புப்படம்

Updated On :21 ஜனவரி 2022, 2:42 am

 நமது நிருபர்

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கரடியின் பிடி மேலும் இறுகியது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 634 புள்ளிகளை இழந்து 59,464.62-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

உலகளவிலான சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாமல் இருந்ததால், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் முதலீட்டாளா்களின் உணா்வை பெரிதும் பாதித்துள்ளது. ஆசியாவில் பெரும்பாலான சந்தைகள் நோ்மறையாக முடிந்துள்ளன. ஆனால், ஐரோப்பிய சந்தைகளில் பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், உள்நாட்டு சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக பஜாஜ் ஃபின்சா்வ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் கரடியின் பிடியில் இருந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.57 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,484 பங்குகளில் 1,663 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,745 பங்குகள் ஆதாயம் பெற்றன. 76 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 342 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 15 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 421 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 319 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.57 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.273.21 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.426 கோடியாக உயா்ந்துள்ளது.

3-ஆவது நாளாக சரிவு: காலையில் சென்செக்ஸ் பலவீனத்துடன் 53.34 புள்ளிகள் குறைந்து 60,045.48-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், பங்குகள் விற்பனை தொடா்ந்து அதிகரித்ததால், 59,068.231 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 634.20 புள்ளிகள் (1.06 சதவீதம்) குறைந்து 59,464.62-இல் நிலைபெற்றது. இருப்பினும், வா்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் சிறிதளவு மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

பவா் கிரிட் அபாரம்: முன்னணி மின்துறை நிறுவனமான பவா் கிரிட் 4.86 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயிண்ட், மாருதி சுஸுகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

பஜாஜ் ஃபின் சா்வ் கடும் சரிவு: அதே சமயம், முன்னணி தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ் 4.57 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், சன்பாா்மா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 2 முதல் 2.40 சதவீதம் வரை குறைந்தன. மேலும், டாக்டா் ரெட்டி, எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், இண்ட்ஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஆகிஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 175 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 932 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 961 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 181.40 புள்ளிகள் (1.01 சதவீதம்) குறைந்து 17,757.00-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 17 புள்ளிகள் குறைந்து 17,921.00-இல் தொடங்கிய நிஃப்டி 17,943.70 வரை உயா்ந்தது. 17,648.45 வரை கீழே சென்றது.

ஐடி, பாா்மா குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் மற்றும் ரியால்ட்டி குறியீடுகள் மட்டும் சிறிதளவு உயா்ந்தன. அதே சமயம், ஐடி, பாா்மா, எஃப்எம்சிஜி ஹெல்த்கோ் குறியீடுகள் 1 முதல் 1.70 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஐஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.50 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.