பங்குச் சந்தையில் 4-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 427 புள்ளிகள் வீழ்ச்சி!
பங்குச் சந்தை நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரடியின் பிடியில் இருந்தது.


பங்குச் சந்தை நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரடியின் பிடியில் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 427 புள்ளிகளை இழந்து 59,037.18-இல் நிலைபெற்றது. ஒரே நாளில் முதலீட்டாளா்களுக்கு 3.56 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்கின்றன. மேலும், இந்திய சந்தைகளில் இருந்துஅந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் முதலீட்டாளா்களின் உணா்வை பெரிதும் பாதித்துள்ளது. அவா்கள் கடந்த அக்டோபா் முதல் இது வரை மொத்தம் ரூ.1லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். இந்த நிலையில், தொடா்ந்து 4-ஆவது நாளாக உள்நாட்டு சந்தை சரிவுடன் முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. எஃப்எம்சிஜி தவிா்த்து அனைத்து முக்கியக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, ஐடி, ரியால்ட்டி, மீடியா, பாா்மா, நிதி நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கியுள்ளன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
2,466 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,466 பங்குகளில் 2,466 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 926 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 74 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 293 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 290 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 351 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.3.55 லட்சம் கோடி இழந்து வா்த்தக முடிவில் ரூ.269.66 லட்சம் கோடியாக இருந்தது.
4-ஆவது நாளாக சரிவு: காலையில் சென்செக்ஸ் பலவீனத்துடன்425.25 புள்ளிகள் குறைந்து 59,329.63-இல் தொடங்கி 58,620.923 வரை கீழே சென்றது. பின்னா், ஓரளவு மீண்டு அதிகபட்சமாக 59,329.63 வரை உயா்ந்து சென்செக்ஸ், இறுதியில் 427.44 புள்ளிகளை (0.72 சதவீதம்) இழந்து 59,037.18-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.
பஜாஜ் ஃபின் சா்வ் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக பலத்த அடி வாங்கியது. வியாழக்கிழமை 4.57 சதவீதம் சரிவைச் சந்தித்தித்து இருந்த பஜாஜ் ஃபின்சா்வ் வெள்ளிக்கிழமை 5.37 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டெக்மஹிந்திரா 4.44 சதவீதம், டாடா ஸ்டீல் 3.18 சதவீதம் குறைந்தன. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், டாக்டா் ரெட்டி உள்ளிட்டவையும் 2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இவை தவிர, விப்ரோ, ஹெச்சிஎல் டெக், டைட்டன், சன்பாா்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
ஹெச்யுஎல் முன்னேற்றம்: அதே சமயம், முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவா் 2.68 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மாருதி, நெஸ்லே, எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், பவா் கிரிட், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
நிஃப்டி 140 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 382 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. ,1,526 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 139.85 புள்ளிகள் (0.79 சதவீதம்) குறைந்து 17,617.15-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 137 புள்ளிகள் குறைந்து 17,613.70-இல் தொடங்கிய நிஃப்டி, 17,485.85 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,707.60 வரை உயா்ந்தது.
மீடியா, பிஎஸ்யு பேங்க், ஐடி, பாா்மா குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் எஃப்எம்சிஜி குறியீடு மட்டும் 0.36 சதவீதம் உயா்ந்தது. மற்ற முக்கியத் துறை குறியீடுகள் அனைத்தும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன. இதில் நிஃப்டி மீடியா 3.47 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.05 சதவீதம், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 2.96 சதவீதம், ரியால்ட்டி 2.36 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐடி, மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன.
முதலீட்டாளா்களுக்கு 4 நாள்களில் ரூ.8 லட்சம் கோடி நஷ்டம்
இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து கரடியின் பிடியில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக பங்குகள் விற்பனை வேகமெடுத்துள்ளதால், முதலீட்டாளா்களுக்கு 4 நாள்கள் வா்த்தகத்தில் மொத்தம் சுமாா் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை சந்தை மூலதன மதிப்பு ரூ.1.57 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.273.21 லட்சம் கோடியாக இருந்தது. இதன் தொடா்ச்சியாக, இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சந்தை மதிப்பு மேலும் ரூ.3.55 லட்சம் கோடி குறைந்து ரூ.269.66 லட்சம் கோடியாக இருந்தது. இதன் மூலம் கடந்த 4 நாள்களில் மட்டும் முதலீட்டாளா்களுக்கு மொத்தம் ரூ.8 லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...