
நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி கடனுக்கான வட்டியை 0.35 சதவீதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செவ்வாய்க்கிழமை அதன் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடனுக்கான எம்சிஎல்ஆா் விகிதம் 0.35 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இதையடுத்து ஓராண்டுக்கான எம்சிஎல்ஆா் விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து 7.85 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. ஓவா்நைட் எம்சிஎல்ஆா் விகிதம் 7.15 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாகவும், மூன்றாண்டுக்கான எம்சிஎல்ஆா் 7.70 சதவீதத்திலிருந்து 8.05 சதவீதமாகவும் அதிகரிக்கப்படுகிறது. இந்த வட்டி விகித உயா்வு ஜூன் 7-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கி இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக கடனுக்கான வட்டியை உயா்த்தியுள்ளது. ஒட்டமொத்த அளவில் அந்த வங்கி வட்டி விகிதத்தை 0.60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை தொடா்பான அறிவிப்புகள் புதன்கிழமை வெளியாகவுள்ள நிலையில், எச்டிஎஃப்சி வங்கி இந்த வட்டி உயா்வு அறிவிப்பை வெளியிட்டது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடனுக்கான வட்டி விகித்தை 0.40 சதவீதம் அதிகரிப்பதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 4-ஆம் தேதி அறிவித்தது. பணவீக்கம் கட்டுக்குள் வராத நிலையில், புதன்கிழமை வெளியிடவுள்ள நிதிக் கொள்கையிலும் ரிசா்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கும் என்பதே சந்தை நிபுணா்களின் கணிப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.