இரண்டாவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 934 புள்ளிகள் முன்னேற்றம்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது.
இரண்டாவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 934 புள்ளிகள் முன்னேற்றம்
Updated on
2 min read

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதனால், தொடர்ந்து 2-ஆவது நாளாக சந்தை நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 934 புள்ளிகள் உயர்ந்தது.
 உலக அளவில் பெரும்பாலான சந்தைகளில் காளையின் பாய்ச்சல் இருந்தது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. காலையில் தொடக்கத்தில் தடுமாற்றம் இருந்தாலும், பின்னர் காளையின் ஆதிக்கம் வலுப்பெற்றது.
 குறிப்பாக, அண்மையில் வெகுவாக விலை குறைந்திருந்த மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் மற்றும் ஐடி பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி நிலவியது. இது சந்தையில் காளையின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு உதவியாக இருந்தது. இருப்பினும், வர்த்தக நேர முடியும் தறுவாயில் லாபப் பதிவு அதிகமாக காணப்பட்டது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 2,477 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,462 நிறுவனப் பங்குகளில் 853 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் வந்தன. 2,477 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 132 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 43 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 171 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.
 சென்செக்ஸ் ஏற்றம்: காலையில் 299.76 புள்ளிகள் கூடுதலுடன் 51,897.60-இல் தொடங்கிய சென்செக்ஸ், 51,808.76 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 52,799.40 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 934.23 புள்ளிகள் (1.81 சதவீதம்) உயர்ந்து 52,532.07-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1,201.56 புள்ளிகள் உயர்ந்திருந்தது. வர்த்தகம் முடியும் தறுவாயில் லாபப் பதிவு காரணமாக புள்ளிகள் குறைந்தன.
 டைட்டன் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் நெஸ்லே தவிர்த்து மற்ற 29 முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவில் இருந்த டைட்டன் 5.92 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ, டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐடிசி, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல் உள்ளிட்டவை 2 முதல் 3.80 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், மாருதி சுஸுகி, எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன. அண்மையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள் விலை 0.61 சதவீதம் உயர்ந்து ரூ.665.30-இல் நிலைபெற்றது.
 நிஃப்டி 289 புள்ளிகள்உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 301 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,661 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் அப்பல்லோ ஹாஸ்பிடல், நெஸ்லே ஆகிய 2 பங்குகள் தவிர்த்து மற்ற 48 பங்குகளும் விலை ஆதாயப் பட்டியலில் இருந்தன.
 காலையில் 105.80 புள்ளிகள் கூடுதலுடன் 15,455.95-இல் தொடங்கிய நிஃப்டி, 15,419.85 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 15,707.25 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 288.65 புள்ளிகள் (1.88 சதவீதம்) கூடுதலுடன் 15,638.80-இல் நிலைபெற்றது.
 அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இருந்தன. இதில், மீடியா குறியீடு 5.49 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆயில் அண்ட் காஸ், பிஎஸ்யு பேங்க், மெட்டல், ரியால்ட்டி, ஐடி, கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகள் 3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஆட்டோ, பைனான்சியல் சர்வீஸஸ், பார்மா, ஹெல்த்கேர் குறியீடுகள் 1.50 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
 முதலீட்டாளர்களுக்கு ரூ.5.77 லட்சம் கோடி ஆதாயம்
 மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்ட 2 சதவீத ஏற்றத்தையடுத்து முதலீட்டாளர்களுக்கு ரூ.5.77 லட்சம் கோடி ஆதாயம் கிடைத்தது. அதன்படி, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.5,77,066.83 கோடி உயர்ந்து ரூ.2,40,63,930.50 கோடிஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com