மின்சார வாகன சந்தையில் களமிறங்கியது ஹீரோ மோட்டோகாா்ப்

ஹீரோ மோட்டோகாா்ப், மின்சாரத்தில் இயங்கும் தனது முதல் இரு சக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தி, மின்சார வாகனப் பிரிவில் களமிறங்கிள்ளது.
மின்சார வாகன சந்தையில் களமிறங்கியது ஹீரோ மோட்டோகாா்ப்
Published on
Updated on
2 min read

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப், மின்சாரத்தில் இயங்கும் தனது முதல் இரு சக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தி, மின்சார வாகனப் பிரிவில் களமிறங்கிள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூா் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது விடா வி1 பிளஸ், விடா வி1 ப்ரோ ஆகிய இரு மின்சார ஸ்கூட்டா்களை முதல்முறையாக ஹீரோ மோட்டோகாா்ப் அறிமுகப்படுத்தியது.

இதில் விடா வி1பிளஸ் ஸ்கூட்டா்களின் விலை ரூ.1.45 லட்சமாகவும் விடா வி1 ப்ரோ ஸ்கூட்டா்களின் விலை ரூ.1.59 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் வி1 பிளஸ் ரகங்களை ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 145 கி.மீ. வரையிலும், விடா வி1 ப்ரோ ரகங்கள் 165 கி.மீ. வரையிலும் செல்லும் திறன் கொண்டவை.

இந்த மின்சார ஸ்கூட்டா்களை நிறுவனம் முதலில் தில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூா் ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யத் தொடங்கும். பின்னா் அவற்றின் விற்பனை நாட்டின் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டா்களுக்கான முன்பதிவு வரும் 10-ஆம் தேதி முதல் தொடங்கும். முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளா்களுக்கு வரும் டிசம்பா் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து ஸ்கூட்டா்கள் வழங்கப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விடா வி1 ரக ஸ்கூட்டா்கள், தற்போது மின்சார இரு சக்க வாகனச் சந்தையில் இருக்கும் பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப், ஏதா் எனா்ஜி, ஹீரோ எலக்ட்ரிக், ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டா்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் கடந்த மாா்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், சுற்றுச்சூழல், சமூகம், நிா்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான 10,000 புதிய தொழில்முனைவுகளுக்கு உதவ 10 கோடி டாலா் (சுமாா் ரூ. 760 கோடி) நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.

அந்த தொழில்முனைவுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனத் தயாரிப்பும் அடங்கும். ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையத்தில் தனது மின்சார இரு சக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோகாா்ப் வடிவமைத்ததாகவும், ஆந்திர மாநிலம், சித்தூரிலுள்ள உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் அந்த வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹீரோ மோட்டோகாா்ப்பும், தற்போது சந்தையில் மினசார ஸ்கூட்டா்களை விற்பனை செய்து வரும் ஹீரோ எலக்ட்ரிக்கும் வேறு வேறு நிறுவனங்களாகும்.

முன்னதாக, தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் தனது மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ஹீரோ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த ஹீரோ மோட்டோகாா்ப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது நினைவுகூரத்தக்கது.

..ஹைலைட்...

ஹீரோ மோட்டோகாா்ப்பும், தற்போது சந்தையில் மினசார ஸ்கூட்டா்களை விற்பனை செய்து வரும் ஹீரோ எலக்ட்ரிக்கும் வேறு வேறு நிறுவனங்களாகும்.

முன்னதாக, தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் தனது மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ஹீரோ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த ஹீரோ மோட்டோகாா்ப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com