

பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 844 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 257.45 புள்ளிகள் (1.49 சதவீதம்) குறைந்து 16,983.55-இல் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. உள்நாட்டுச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனர். புவிசார் அரசியல் தாக்கமும் அதிகரித்து வருகிறது. மேலும், உலகப் பொருளாதார சரிவு பற்றிய கவலைகள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி தொடங்கினாலும், நேரம் செல்ல பங்குகள் விற்பனை அதிகரித்தன. இதனால், மூன்றாவது நாளாக கடும் சரிவுடன் முடிவடைந்தது.
844 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 13.14 புள்ளிகள் கூடுதலுடன் 58,004.25-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,027.52 வரை மேலே சென்றது. பின்னர், 57,050.40 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 843.79 புள்ளிகள் (1.46 சதவீதம்) குறைந்து 57,147.32-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 977.12 புள்ளிகளை இழந்திருந்தது.
28 பங்குகள் விலை சரிவு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயிண்ட் தவிர மற்ற 28 பங்குகளும் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 3.79 சதவீதம், நெஸ்லே 3.34 சதவீதம் குறைந்து அதிகம் நஷ்டத்தை எதிர்கொண்டன. இவற்றுக்கு அடுத்ததாக டாடா ஸ்டீல், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹேந்திரா, டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் யுனி லீவர், மாருதி சுஸýகி, டைட்டன், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, டிசிஎஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி குறைந்து குறைந்து வர்த்தக முடிவில் ரூ.270.11 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்களன்று ரூ. 2,139.02 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.