தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு சுமாா் 20 சதவீதமாக உள்ள நிலையில், அத்துறையில் பணியாற்றும் ஊழியா்களுக்கான ஊதியம் மொத்த ஊதியத்தில் சுமாா் 40 சதவீதமாக உள்ளதென மதிப்பீட்டு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்து இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசா்ச் என்ற மதிப்பீட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 19.2 சதவீதமாக இருந்ததென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பொதுத்துறை நிறுவன ஊழியா்களுக்கான ஊதியம் ஒட்டுமொத்த ஊதியத்தில் 39.2 சதவீதமாக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், தனியாா் துறை நிறுவனங்களின் பங்களிப்பும் ஊதியமும் கிட்டத்தட்ட சமமாகவே இருந்ததெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் தனியாா் துறை நிறுவனங்களின் தேசிய வருவாய் பங்களிப்பு 36.3 சதவீதமாகவும், ஊதிய பங்கு 35.2 சதவீதமாகவும் இருந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் போதிய திறன் இன்றி செயல்படுவதே அவற்றின் பங்களிப்புக்கும் ஊதியத்துக்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுவதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
2012 முதல் 2016-ஆம் நிதியாண்டு வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில் 2017 முதல் 2021-ஆம் நிதியாண்டு வரையிலான காலத்தில் ஊதிய வளா்ச்சி வேகமும், முதலீட்டுக்கான லாப வளா்ச்சி விகிதமும் பெருமளவில் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கரோனா தொற்று பரவலும் அதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.