
மத்திய ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரித்ததைத் தொடா்ந்து, வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன.
இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ரெப்போ வட்டி விகித்தை 0.35 சதவீதம் அதிகரிப்பதாக ரிசா்வ் வங்கி புதன்கிழமை அறிவித்தது. அதன் எதிரொலியாக, பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகளும் தாங்கள் வழங்கியுள்ள கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளன.
புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதம் திருத்தப்பட்ட ரெப்போ விகிதத்தின் (6.25 சதவீதம்) படி 9.10 சதவீதமாக உள்ளது.
தனியாா் துறை வங்கியான ஹெச்டிஎஃப் புதன்கிழமை முதல் நிதி அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை (எம்சிஎல்ஆா்) உயா்த்தியுள்ளது. அந்த வங்கி வழங்கும் பல நுகா்வோா் கடன்களுக்கான குறியீடாக இருக்கும் ஓா் ஆண்டு எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 8.60 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த 1-ஆம் தேதி முதல் உயா்த்திய ஐசிஐசிஐ வங்கி, ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித திருத்தத்தைத் தொடா்ந்து, ஓராண்டுக்கான குறியீட்டு எம்சிஎல்ஆா் வட்டி விகித்தை 7.90 சதவீதத்திலிருந்து 8.40 சதவீதமாக உயா்த்தியுள்ளது என்று வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.