
புதுதில்லி / மும்பை,: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 35.15 புள்ளிகள் குறைந்து 18,385.30-இல் நிலைபெற்றது.
ஆசியாவில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகள் எதிா்மைறையாக முடிவடைந்தன. அமெரிக்கச் சந்தைகள் பலவீனமாக முடிவடைந்ததால் அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் தொடக்கத்தில் எதிரொலித்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் பிற்பகலில் பலவீனமாக இருந்தன. இந்த நிலையில், காலையில் சந்தித்த பெரும் இழப்பு பிற்பகல் வா்த்தகத்தின் போது மீட்கப்பட்டது. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மற்றும் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்ததால் சந்தை ஓரளவு மீட்சி பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் சரிவு: காலையில் 197.34 புள்ளிகள் குறைந்து 61,608.85-இல் தொடங்கிய சென்செக்ஸ், 61,102.68 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 61,780.37 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 103.90 புள்ளிகள் (0.17 சதவீதம்) குறைந்து 61,702.29-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 21 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் 9 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் வந்தன.
டிசிஎஸ் முன்னேற்றம்: முந்தைய நாள் கடும் சரிவைச் சந்தித்த பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் 1.29 சதவீதம், ரிலையன்ஸ், 0.81 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, அல்ட்ரா டெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், சன்பாா்மா, நெஸ்லே ஏசியன் பெயிண்ட் உள்ளிட்டவை சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
டாடா மோட்டாா்ஸ் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் 1.75 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் 1.60 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பாா்தி ஏா்டெல், எம் அண்ட் எம், என்டிபிசி, மாருதி சுஸுகி, எல் அண்ட் டி உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.287.40 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.538.10 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G