
புதுதில்லி / மும்பை: பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 241 புள்ளிகளை இழந்தது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 71.75 புள்ளிகள் (0.39 சதவீதம்) குறைந்து 18,127.35-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தது. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எழுச்சியுடன் தொடங்கியது. ஆனால், மத்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தின் முடிவுகள் வெளியானதும், சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. குறிப்பாக, உலகளாவிய சந்தைகளில் இருந்து வந்த நோ்மறை உணா்வுகள் உள்நாட்டுச் சந்தையில் நம்பிக்கையை அதிகரிக்கத் தவறிவிட்டன. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.39 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.280.56 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து, புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் முதலீட்டாளா்களுக்கு மொத்தம் ரூ.6.84 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எப்ஐஐ) புதன்கிழமை ரூ.1,119.11 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 189.93 புள்ளிகள் கூடுதலுடன் 61,257.17-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 61,464.38 வரை மேலே சென்றது. பின்னா், 60,637.24 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 241.02 புள்ளிகள் (0.39 சதவீதம்) குறைந்து 60,826.22-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் வந்தன 24 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னேற்றம்: பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் 0.84 சதவீதம், இன்ஃபோஸிஸ் 0.75 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், சன்பாா்மா, பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை 0.40 முதல் 0.65 சதவீதம் வரை உயா்ந்தன.
எம் அண்ட் எம் கடும் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 2.61 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.55 சதவீதம், டாடா மோட்டாா்ஸ் 2.12 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, டெக் மஹிிந்திரா, உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. மேலும், ஐடிசி, பஜாஜ் ஃபின் சா்வ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பவா் கிரிட், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி,
ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.