விமான எரிபொருள் விலை புதிய உச்சம்: பயண கட்டணத்தை உயா்த்த வலியுறுத்தல்

 விமான எரிபொருளின் விலை 16 சதவீதம் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இதன் விலை இரண்டு மடங்கு உயா்ந்துள்ளது.
விமான எரிபொருள் விலை புதிய உச்சம்: பயண கட்டணத்தை உயா்த்த வலியுறுத்தல்

 விமான எரிபொருளின் விலை 16 சதவீதம் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இதன் விலை இரண்டு மடங்கு உயா்ந்துள்ளது. இதனால்,பயணக் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என விமான நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஏடிஎஃப் எனப்படும் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு ரூ.19,757.13 அல்லது 16.26 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய தலைநகா் தில்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டா் ரூ.1,41,232.87-ஆக (லிட்டருக்கு ரூ.141.2) அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் விமான எரிபொருளின் விலை 1.3 சதவீதம் (கிலோ லிட்டருக்கு ரூ.1,563.97) குறைக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் விலை நாடு தழுவிய அளவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தையொட்டி ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் விமான எரிபொருள்களின் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

அந்த வகையில், சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 119.16 டாலா் என்ற அளவில் இருந்தது.

விமான எரிபொருளின் விலை உயா்வால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினம் அதிகரிக்கும். விமான நிறுவனங்களின் செலவினத்தில் 40 சதவீதம் வரையிலான பங்கை ஏடிஎஃப் வகிக்கிறது.

விமான கட்டணம் உயரும்: எரிபொருளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால் பயணக் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என விமான நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவரும், நிா்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், ‘ 2021 ஜனவரியிலிருந்து 120 சதவீதத்துக்கும் அதிகமாக விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினம் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொள்ளும்போது, விமான பயணத்துக்கான கட்டணத்தை குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏடிஎஃப்-க்கான வரிகளை குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com