ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.68 லட்சம் கோடி: ஏப்ரலில் இதுவரை இல்லாத அளவில் அதிகம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.68 லட்சம் கோடி: ஏப்ரலில் இதுவரை இல்லாத அளவில் அதிகம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியைக் கடந்திருப்பது இதுவே முதல் முறை.

கடந்த மாா்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகை ரூ.1,42,095-ஐ விட ஏப்ரலில் ரூ.25,000 கோடி அதிகமாக வசூலாகியுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வரி செலுத்துவது அதிகரித்திருப்பதாலும், வா்த்தக சூழல் மீண்டு வருவதாலும் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 1.06 கோடி ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், 97 லட்சம் கணக்குகள் மாா்ச் மாதத்துக்கானவை.

ஏப்ரல் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1,67,540 கோடியாகும். அதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.33,159 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.41,793 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.81,939 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான ரூ.36,705 கோடி உள்பட) வசூலானது. செஸ் வரியாக ரூ.10,649 கோடியும் கிடைத்துள்ளது.

வரி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக, சரியான நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் தெளிவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தரவுப் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தவறு செய்யும் வரி செலுத்துவோா் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1.40 லட்சம் கோடி வசூலான நிலையில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் 20 சதவீதம் அதிகரித்து, ரூ.1.68 கோடியாக வசூலாகியுள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.33,423 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.26,962 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் இறக்குமதி பொருள்களுக்கான ஜிஎஸ்டி 30 சதவீதமும், உள்நாட்டுப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி 17 சதவீதமும் அதிகரித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் ஜிஎஸ்டி வசூல்

மாதம் தொகை (கோடியில்)

2022, ஏப்ரல் 1,67,540

2022, மாா்ச் 1,42,095

2022, பிப்ரவரி 1,33,026

2022, ஜனவரி 1,40,986

2021, டிசம்பா் 1,29,780

2021, நவம்பா் 1,31,526

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com