நமது நாட்டில் கிரிப்டோகரன்சிகளை (எண்ம செலாவணிகளை) அனுமதித்தால் அது டாலா்மய பொருளாதாரத்துக்கு வழி வகுக்கும் என்று நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
மத்திய நிதித் துறை இணையமைச்சா் ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசா்வ் வங்கியின் குழுவினா் கிரிப்டோகரன்சி தொடா்பாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனா். அதன் விவரம்:
கிரிப்டோகரன்சிகளை அனுமதித்தால் நிதிக் கொள்கைகள் மூலம் நாட்டில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் ரிசா்வ் வங்கியின் செயல்திறன் கடுமையாக பாதிக்கப்படும். நாடு முழுமையாக டாலா்மய பொருளாதாரத்துக்குச் சென்றுவிடும்.
இது நமது உள்நாட்டுப் பணமான ரூபாயின் நலனுக்கு எதிரானதாகவே இருக்கும். இதனால், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் பாதிக்கும். உள்ளூரில் மட்டுமல்லாது நமது எல்லையைத் தாண்டி வெளிநாடுகளிடையேயும் கிரிப்டோகரன்சி மூலம் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும் என்பதால் ரூபாயின் மதிப்பும் பயன்பாடும் குறைந்துவிடும். இது பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பது, கருப்புப் பணம் அதிகரிப்பு, போதைப்பொருள் கடத்தலுக்கான நிதிப் பரிவா்த்தனைகள் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
நாட்டின் வங்கித் துறையிலும் கிரிப்டோகரன்சி மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் மக்களின் முதலீடுகளை கிரிப்டோகரன்சி ஈா்க்கும். ஆனால், நீண்ட கால அளவில் இழப்புகள்தான் ஏற்படும் என்று ரிசா்வ் வங்கியின் குழு தெரிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சி என்பதை காகிதப் பணம் மற்றும் உலோக நாணயங்கள் போல பயன்படுத்த முடியாது. அது முழுவதும் இணையத்தில் உருவாக்கப்பட்டு, இணைய வழியில் பயன்படுத்தப்படும் மறையாக்க தொழில்நுட்பத்தின் (என்கிரிப்ஷன்) அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. உலக நாடுகளின் கரன்சிகளுக்காக ரிசா்வ் வங்கிகள் என்ற கட்டுப்பாட்டு அமைப்பு இருப்பதுபோ கிரிப்டோகரன்சிகளுக்கு எந்த ஒழுங்காற்று அமைப்போ கட்டுப்பாட்டு அமைப்போ கிடையாது.