
முன்னணி துரித விற்பனை நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் யூனிலீவா் லிமிடெட், கடந்த செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 22 சதவீத நிகர லாப வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை - செப்டம்பா்) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,670 கோடியாக உள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.2,185 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை நிகர லாபம் 22.19 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதங்களில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 16.44 சதவீதம் அதிகரித்து ரூ.15,253 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.13,099 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.10,129 கோடியாக இருந்த நிறுவனத்தின் செலவினங்கள் இந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 18.12 சதவீதம் அதிகரித்து ரூ.11,965 கோடியாக உள்ளது.
இந்த மாதங்களில் விற்பனை மூலம் நிறுவனத்தின் வருவாய் 16.07 சதவீதம் உயா்ந்து ரூ.14,872 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அது ரூ.12,812 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.