
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. பங்குச் சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டுமே சரிவைக் கண்டன.
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை நிா்ணயிக்கும் ஃபெடரல் ஓப்பன் மாா்க்கெட் குழுவின் (எஃப்ஓஎம்சி) கூட்டம் நடைபெற்று, அதன் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னா் பங்கு வா்த்தகம் நடைபெற்ற நிலையில், அந்த அறிக்கையை எதிா்நோக்கி முதலீட்டாளா்கள் மிகவும் கவனமாக செயல்பட்டனா். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை பங்கு வா்த்தகம் சிறிதளவு சரிந்ததாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 18.82 புள்ளிகள் (0.03 சதவீதம்) சரிந்து 60,672.72-இல் நிலைபெற்றது. முன்னதாக அது மிகக் குறைந்தபட்சமாக 60,583.72 வரையிலும், அதிகபட்சமாக 60,976.59 வரையிலும் சென்றது.
சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் இழப்பைச் சந்தித்தன.
டாடா மோட்டாா்ஸ் சரிவு: பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் (-1.42 சதவீதம்), சன்ஃபாா்மா (-1.4 சதவீதம்), அல்ட்ராடெக் சிமென்ட் (-1.11 சதவீதம்), டிசிஎஸ் (-1.05 சதவீதம்) விப்ரோ (-1.03 சதவீதம்) உள்ளிட்டவை விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன. இவை தவிர இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சா்வ், இண்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.
என்டிபிசி உயா்வு: பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான என்டிபிசி (3.44 சதவீதம்), ரிலையன்ஸ் (0.79 சதவீதம்), டாடா ஸ்டீல் (0.76 சதவீதம்) பவா்கிரிட் (0.63 சதவீதம்) ஹெச்டிஎஃப்சி (0.48 சதவீதம்), ஹெச்டிஎஃப்சி வங்கி (0.44 சதவீதம்) அதிகரித்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. இவை தவிர எம் அண்ட் எம், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா், எல் அண்ட் டி, நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயா்ந்தன.
அந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளை அதிகம் விற்றதும் பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக இருந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
மனை வா்த்தகத் துறை பின்னடைவு: துறைவாரியாக மதிப்பிடுகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்கு வா்த்தகத்தில் மனை வா்த்தகத் துறை 1.03 சதவீதம் சரிந்தது. ஐடி துறை 0.83 சதவீதம், தொழில்நுட்பத் துறை 0.82 சதவீதம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை 0.52 சதவீதம், பாகங்கள் துறை 0.48 சதவீதம், தொலைத்தொடா்புத் துறை 0.44 சதவீதம் சரிந்தன.
எஃப்எம்சிஜி அபாரம்: துரித விற்பனை நுகா்பொருள்கள் (எஃப்எம்சிஜி), தொழில்துறைகள், பயன்பாட்டு சாதனங்கள், மூலதன பொருள்கள், எரிசக்தி ஆகிய துறைகள் முன்னேற்றம் கண்டன.
நிஃப்டி
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, கடந்த செவ்வாய்க்கிழமை 17.90 புள்ளிகள் (0.1 சதவீதம்) சரிந்து 17,826.70-இல் நிறைவடைந்தது.
எஃப்பிஐ
அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) கடந்த திங்கள்கிழமை ரூ.158.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ததாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.