மதுரையில் ஆசியக் கண்டத்தின் ஒரு மைல் கல்!

6 லட்சம் சதுர அடி கட்டடம் ஒரு தனி உரிமையாளரின் கட்டுப்பாட்டில், முழுமையாக சில்லறை வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில்.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்...
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்...

தென் தமிழகத்தின் இதயப் பகுதியான மதுரையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ஒரு பிரமாண்ட கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டில் மும்முரமாக நடைபெற்றது. அரண்மனை போன்ற தோன்றத்தில் உருவாகிக் கொண்டிருந்த அந்தக் கட்டடம் எதற்கு? என்பது மதுரை மக்கள் பலரின் மனதில் நிலை கொண்டிருந்த கேள்வியாக இருந்தது. இதையொட்டி, அந்த இடத்தில் திரையரங்கம் வருகிறது, வெளிநாட்டைச் சேர்ந்த பெரு நிறுவனத்தின் ஷாப்பிங் மால் அமைகிறது என பல யூகங்கள் வலம் வந்தன.

அத்தனை யூகங்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் பதில் கிடைத்தது. அனைவரும் பிரமித்துப் பார்த்துச் சென்றுகொண்டிருந்த அந்த இடத்தில், தமிழகத்தின் சில்லறை வணிகத்தில் கோலோச்சும் நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் டிசம்பர் 5 - ஆம் தேதி திறக்கப்பட்டது. எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்ததுடன், அந்த நிகழ்வைத் தாண்டி அனைவரும் அடுத்தடுத்த விஷயங்களுக்குக் கடந்துவிட்டனர்.


ஆனால், இந்த சரவணா ஸ்டோர்ஸ் மதுரையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது என்பது பலரும் அறியாதது. ஆம், ஆசிய கண்டத்திலேயே தனி ஒரு உரிமையாளரின் நிர்வாகத்தில் இயங்கும் மிகப் பெரிய சில்லறை வணிகத்தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்.

5 ஏக்கர் பரப்பில், 6 லட்சம் சதுர அடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடமாக உருவாகியுள்ளது இந்த சரவணா ஸ்டோர்ஸ்.  ஒவ்வொரு தளமும் தலா 60 ஆயிரம் சதுர அடி என்ற அளவில் 10 தளங்கள் இங்கு உள்ளன. 1,000 கார்களையும், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் வசதிகொண்டதாக 2 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது வாகனங்கள் நிறுத்தும் தளம்.


தரைத் தளத்தில் பிரமாண்ட அளவில் அமைந்துள்ளது சூப்பர் ஜுவல்லரி. தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளிப் பொருள்கள், பிளாட்டினம் என அனைத்து வகை ஆபரணங்களும் அழகுற விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 


பெண்களுக்கு முன்னுரிமை என்பதைப் போல முதல் தளம் முழுமையும் பெண்களின் மனம் கவரும் சேலை மற்றும் பிளவுஸ் மெட்டீரியல்களாக உள்ளன. இரண்டாவது தளம், திருமணத்துக்கான துணி வகைகள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது. மூன்றாவது தளம், சிறார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கானதாக உள்ளது. நான்காவது தளம் முழுமையும் ஆண்களின் ஆடைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது.

ஐந்தாவது தளம் அழகு சாதனப் பொருள்கள், எழுது பொருள்கள் என பல்பொருள்களின் விற்பனைக் கூடமாக உள்ளது. ஆறாவது தளம் காலணிகளின் காட்சிக் கூடமாகவும் சிலம்பக் கம்பு உள்பட பல விளையாட்டு சாதனங்களின்  விற்பனைத் தளமாகவும் உள்ளது.

ஏழாவது தளத்தில் நவீன சமையலறை சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், கைப்பேசிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளன. எட்டாவது தளத்தில் பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்காரப் பொருள்களும், ஒன்பதாவது தளத்தில் மளிகைப் பொருள்கள், பழங்கள் விற்பனையகமும்,  உணவகமும் அமைந்துள்ளன.

ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில் சுமார் 30 சதவீத சில்லறை வர்த்தகம் பாதிக்கப்பட்டு விட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த பாதிப்பு சதவீதம் 50 சதவீதமாக உயரும் என சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 2,000 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கியுள்ளது  இந்த நிறுவனம். சில்லறை வணிகத்தை உயிர்ப்புடன் இருக்கச் செய்வதில், தமிழகத்தைச் சேர்ந்த இதுபோன்ற நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளபடியே பாராட்டுக்குரியது என்கின்றனர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள்.

6 லட்சம் சதுர அடி பரப்பைவிடவும் மிக பிரமாண்ட கட்டடங்கள் சென்னை, புதுதில்லி போன்ற பெரு நகரங்களில் உள்ளன என்றாலும் அவை தனி ஒரு உரிமையாளரின் நிர்வாகத்துக்கு உள்பட்டவை அல்ல.

மிகப்பெரிய அளவில் உள்ள பல ஷாப்பிங் மால்களின் பல்வேறு பகுதிகள், பல்வேறு பிராண்டட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன அல்லது குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால், 6 லட்சம் சதுர அடி கட்டடமும் ஒரு தனி உரிமையாளரின் கட்டுப்பாட்டில், முழுமையாக சில்லறை வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது எனில், அது மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மட்டுமே. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்த வணிகத் தளம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com