டிஜிட்டல்மயமான முதல்வர்!

திமுக அரசு பதவியேற்றது முதலே, மக்களுக்கு வெளிப்படையான அரசு சேவைகளை வழங்கும்பொருட்டு,  பல துறைகள் எண்ம (டிஜிட்டல்) மயமாக்கப்பட்டு வருகின்றன. 
டிஜிட்டல்மயமான முதல்வர்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ்நாடு முதல்வராக முதல்முறையாக மு.க. ஸ்டாலின் கடந்த 2021, மே 7 ஆம் தேதி பதவியேற்றார். திமுக அரசு பதவியேற்றதுமே பெண்களுக்கான இலவசப் பேருந்து உள்ளிட்ட பல அதிரடி திட்டங்களை கொண்டு வந்தது. 

இந்நிலையில், மக்களுக்கு வெளிப்படையான அரசு சேவைகளை வழங்கும்பொருட்டு, திமுக அரசு பதவியேற்றது முதலே, பல துறைகள் எண்ம(டிஜிட்டல்)மயமாக்கப்பட்டு வருகின்றன. 

மக்கள் எளிதாக அரசுத் துறைகளை அணுகவும், விரைவாக சேவைகளைப் பெறவும், சேவைகளில் உள்ள குறைகளை எளிதாகக் களையவும் பல்வேறு துறைகளில், திட்டங்களில் எண்மமயம் புகுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் திமுக அரசில் கொண்டுவரப்பட்ட எண்ம திட்டங்கள், செயல்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம், 

முதல் காகிதமில்லா பட்ஜெட்

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதுமே நிதிநிலை அறிக்கையில் எண்மமயமாக்கலை கொண்டு வந்தார். 2021 ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் முதல் காகிதமில்லா எண்ம (டிஜிட்டல்) பட்ஜெட் இதுவாகும்.

இதற்காக நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் சட்ட முன்வடிவு ஆவணங்கள் என அனைத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு டேப்லட் மூலம் அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

எண்ம (டிஜிட்டல்) தமிழ்நாடு

அந்த சட்டப்பேரவையிலேயே அரசுத் துறைகளின் செயல்பாடுகளை படிப்படியாக எண்மமயமாக்க, ‘எண்ம (டிஜிட்டல்) தமிழ்நாடு’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவித்தார். 

மேலும், வெளிப்படையான நிா்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மின்னாளுகையை படிப்படியாக அரசின் அனைத்து நிலைகளிலும் புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் படிப்படியாக அனைத்து துறைகளும் எண்மமயமாக்கப்படும் என்றார். 

சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒளிபரப்பு 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தவகையில், ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அவர் சொன்னபடியே, 2022 ஜனவரி மாதம் முதல்முதலாக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. அரசு கேபிள் டிவி மற்றும் யூட்யூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள், விவாதங்கள் அனைத்தும் லைவ் செய்யப்படுவது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. செய்தி துறையின் யூட்யூப் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலும் நேரலை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுவும் திமுக மு.க.ஸ்டாலின் அரசின் முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 

முதல்வர் தகவல் பலகை

தமிழ்நாடு அரசினுடைய முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த 'முதலமைச்சர் தகவல் பலகை' என்ற புதிய நடைமுறையை கடந்த 2021 டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த 'ஆன்லைன் தகவல் பலகை' மூலமாக அரசு அளித்துள்ள வாக்குறுதிகள், வெளியிட்டுள்ள அறிவிப்புகள், அரசின் முக்கிய செயல் திட்டங்கள் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் நிகழ் நேர தகவல், முறையான கண்காணிப்பு, அரசின் செயல்திறன் அதிகரிப்பு, தாமதங்களை குறைத்தல் மற்றும் உடனடி முடிவுகள் எடுத்தல் உள்ளிட்டவை சாத்தியமாகிறது. 

கோயில் க்யூஆர் கோடு டிக்கெட்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவோர், அர்ச்சனை சீட்டு பெறுவோருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய க்யூஆர் கோடு டிக்கெட் வழங்கும் நடைமுறை கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இது இணையதளம் மூலமாக க்யூஆர் கோடு முறையில் வழங்கப்படுவதால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட கோவில்களில் இந்த நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயில் ஆவணங்கள் எண்மமயம்

அதுபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் எண்மமயமாக்குவது 2021 ஜூன் மாதம் தொடங்கியது. பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையத்தில் ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களின் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. 

தொழில்த் துறை 

தொழில்களை ஈர்க்க, 24 துறைகளைச் சார்ந்த 100 சேவைகளை மின்மய வடிவில் அளித்திடும் வகையில் “ஒற்றைச் சாளர இணையதளம்-2.0 என்ற இணையதளம் கடந்த 2021 ஜூலை மாதம் முதல்வரால் தொடங்கப்பட்டது. 

அதுபோல அதே ஆண்டு நவம்பர் மாதம் “ஒற்றைச்சாளர கைபேசி செயலி”யையும் 2022 மார்ச் மாதம் தொழில் தொடங்குவதற்குரிய அனுமதிகள், ஒப்புதல்கள், நடைமுறைகளை அறியும் 'வழிகாட்டி நிறுவனத்தின் புதிய இணைய தளத்தை' முதல்வர் துவக்கி வைத்தார். 

எங்கிருந்தும் பட்டா பெறலாம்!

பட்டா மாறுதலுக்காக 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற நிலஅளவு வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும், மனைப் பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து விரைவில் பட்டா வழங்கும்பொருட்டு தமிழ் நிலம் இணையதளத்தில் வருவாய்த் துறைக்கான புதிய மென்பொருளை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிவைத்தார்.

டிஜிட்டல் எக்ஸ்ரே ஆம்புலன்ஸ் 

2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய  காசநோய் குறித்து கண்டறிய, நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்களை கடந்த ஜூலை மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுபோன்று மருத்துவத் துறையில் பல எண்ம சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

நிதித்துறை செயல்பாடுகள் 

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் துறைகளில் உள்ள புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக நிதித்துறை சார்பில் 'தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதிய'த்தை கடந்த ஜனவரி மாதம் முதல்வர் தொடக்கிவைத்தார்.

மேலும் தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக www.ccfms.tn.gov.in என்ற புதிய வலைதளமும் தொடங்கப்பட்டுள்ளது. 

தகவல் தொழில்நுட்ப மென்பொருள்கள் 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 அக்டோபரில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” ஆகிய இரண்டு வலைத்தளங்களையும், “கீழடி- தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி – தமிழிணைய ஒருங்குறி மாற்றி” ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் தொடங்கி வைத்தார். 

எண்ணும் எழுத்தும் 

கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடுகட்ட/ சரிசெய்ய தமிழ்நாட்டில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் கடந்த 2022 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம், 2025-க்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதாகும். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 1 முதல் 3 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள், சூழ்நிலையியல் பாடக்கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும். இதற்காக 'எண்ணும் எழுத்தும்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி

கரோனா பெருந்தொற்றுக் காலங்களில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் இணையத்தில் பதிய ஏற்பாடு செய்யப்பட்டு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன. 

ஸ்மார்ட் வகுப்பறைகள்

தமிழ்நாடுத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ. 150 கோடியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் அறிவித்துள்ளார். 

அதன்படி சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளை அதிநவீன வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அதிநவீன அரசு பள்ளி வகுப்பறைகள் டிஜிட்டல் வகுப்பறைகளாக இருக்கும். இணையதளம், நவீனமயமாக்கப்பட்ட மேஜைகள், உள்ளிட்டவற்றை இருக்கும். 

தகைசால் பள்ளிகள்

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக 26 அரசுப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 15 மாதிரிப் பள்ளிகளையும் கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் தொடங்கி வைத்தார். 

மேலும் கல்வித்துறையில் ஸ்மார்ட் வகுப்புகள்,  ஆன்லைன் மாணவர் சேர்க்கை, கல்வி தொலைக்காட்சி, அரசின் எண்ம நூலகம் பக்கத்தில் இ-புத்தகங்கள், இணையவழி கற்றல் தளங்கள், TN SCERT சேனல் மூலம் யூட்யூப் விடியோக்கள் உள்ளிட்ட கல்வித்துறையில் இணையக் கற்றல் வசதிகள் உள்ளன. 

பெண்களின் பாதுகாப்பு 

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பெண்கள், மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 500 மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதுபோன்று மக்களின் வசதிக்காக, எண்ம துறையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு பல புதிய திட்டங்களை, நடைமுறைகளை புகுத்தி வருவது மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

அரசு சேவைகள் எளிதாகக் கிடைக்கும்போது மக்கள் பயன்பெறுவதுடன், மாநிலமும் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் காண முடியும்! 

[வணிகப் பெருக்கச் செய்தி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com