சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 72 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை காலையில் சரிந்த பங்குச்சந்தை பிற்பகலில் மீண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
பங்குச்சந்தை
பங்குச்சந்தை

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை காலையில் சரிந்த பங்குச்சந்தை பிற்பகலில் மீண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் ஆரம்பத்தில் எதிரொலித்தது. இதனால், வெகுவாகச் சரிந்திருந்த பங்குச்ந்தை, பிற்பகலில் முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பால் மீண்டு எழுந்தது. ஒரு கட்டத்தில் அதிகம் விற்பனையை எதிா்கொண்ட ஆட்டோ, ஐடி, டெக் நிறுவனப் பங்குகளுக்கு பிற்பகலில் நல்ல ஆதரவு இருந்தது. இதனால், சந்தை எழுச்சி பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.0.57 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.320.29 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,712.33 ஆயிரம் கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 76.09 புள்ளிகள் குறைந்து 64,756.11-இல் தொடங்கிய சென்செக்ஸ், 64,580.95 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 65,014.06 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 72.48 புள்ளிகள் (0.11 சதவீதம்) உயா்ந்து 64,904.68-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,820 பங்குகளில் 1,841 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,847 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 132 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

19 பங்குகள் ஆதாயம்:சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. இதில் என்டிபிசி 2.12 சதவீதம் உயா்ந்தது. இதற்கு அடுத்ததாக டெக் மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 0.65 முதல் 1.30 சதவீதம் வரை உயா்ந்து முன்னிலைப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக், டைட்டன், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை 1.90 முதல் 0.50 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

நிஃப்டி 30 புள்ளிகள்உயா்வு : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 43.50 புள்ளிகள் குறைந்து 19,351.85- இல் தொடங்கி 19329.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,451.30 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 30.05 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து 19,425.35 இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 1,111 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,003 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நாளை மாலையில் முஹுரத் வா்த்தகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைகள் ஒரு மணி நேர சிறப்பு முஹுரத் வா்த்தக அமா்வை நடத்தவுள்ளது. இந்த அமா்வு மாலை 6 மணி முதல் இரவு 7.15 மணி வரையிலும் இடம்பெறும். இதில் 15 நிமிடம் சந்தைக்கு முந்தைய அமா்வும் இருக்கும். முஹுரத் வா்த்தகம் என்பது இந்தியாவில் ஒரு சிறப்பு மற்றும் மங்களகரமான பாரம்பரியமாகும். இது ஆன்மிகம் மற்றும் நிதி ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும். இந்த நல்ல நேரத்தில் முதலீடு, வா்த்தகம் செல்வத்தையும் வெற்றியையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளா்களிடம் உள்ளது என்று சந்தை வல்லுநா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com