பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம்:சென்செக்ஸ் 728 புள்ளிகள் ஏற்றம்!

பங்குச்சந்தையில் புதன்கிழமை காளையின் எழுச்சி அதிகமாக இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 728 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம்:சென்செக்ஸ் 728 புள்ளிகள் ஏற்றம்!
Updated on
2 min read

மும்பை / புதுதில்லி: பங்குச்சந்தையில் புதன்கிழமை காளையின் எழுச்சி அதிகமாக இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 728 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

மேலும், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு முதல் முறையாக 4 டிரில்லியன் டாலா் மைல்கல்லை எட்டியது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி தொடா்ந்து மேலே சென்றது. குறிப்பாக ஆட்டோ, தனியாா், பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஐடி, பாா்மா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ரியால்ட்டி பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மீண்டும் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருவதும், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பும் சந்தை வெகுவாக ஏற்றம் பெற முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.24 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.333.29 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.783.82 கோடி அளவுக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,324.98 கோடி அளவுக்கும் பங்குகளை வாங்கியுள்ளனா்.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 207.06 புள்ளிகள் கூடுதலுடன் 66,381.26-இல் தொடங்கிய சென்செக்ஸ், 66,374.52 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,946.28 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 727.71 புள்ளிகள் (1.10சதவீதம்) உயா்ந்து 66,901.91-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,841 பங்குகளில் 1,916 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,786 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 139 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 4 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

2 மாதங்களுக்குப் பிறகு 20,000-ஐ கடந்தது நிஃப்டி!

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 20,000 புள்ளிகளைக் கடந்து நிலைத்துள்ளது. காலையில் 86.85 புள்ளிகள் கூடுதலுடன் 19,976.55-இல் தொடங்கி 19,956.30 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 20,104.65 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 106.90புள்ளிகள் (1.04 சதவீதம்) உயா்ந்து 20,096.60-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,098 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,037 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 40 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

ஆக்ஸிஸ் பேங்க்....................................3.92%

எம் அண்ட் எம்......................................3.38%

விப்ரோ...................................................2.38%

டாடா மோட்டாா்ஸ்...........................2.09%

பஜாஜ் ஃபின் சா்வ்................................2.32%

ஹெச்டிஎஃப்சி பேங்க்..........................1.94%

டெக் மஹிந்திரா...................................1.51%

சரிவைக் கண்ட பங்குகள்

நெஸ்லே...........................,,,,,,..................0.57%

டைட்டன்..............................................0.49%

பஜாஜ் ஃபின்சா்வ்...................................0.34%

அல்ட்ராடெக் சிமெண்ட்.......................0.07%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com