
தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி, கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.202 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.202 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 45 சதவீதம் குறைவாகும்.
2022 ஏப்ரல் முதல் கடந்த மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் 32.7 சதவீதம் சரிந்து ரூ.717 கோடியாக உள்ளது.
மாா்ச்சுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், வங்கியின் நிகர வட்டி வருவாய் 15.4 சதவீதம் அதிகரித்து ரூ.2,105 கோடியாகவும், வட்டி அல்லாத வருவாய் 22.8 சதவீதம் அதிகரித்து ரூ.1,082 கோடியாகவும் உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.