
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப், மின்சாரத்தில் இயங்கும் தனது ஸ்கூட்டா்களை முதல்முறையாக விற்பனையாளா்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹீரோ மோட்டோகாா்ப்பின் ‘விடா வி1’ மின்சார ஸ்கூட்டா்களை விற்பனையாளா்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளோம். முதல்முறையாக பெங்களூரிலுள்ள விநியோகஸ்தா்களுக்கு அந்த ஸ்கூட்டா்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன.
அதன் தொடா்ச்சியாக, ஜெய்ப்பூா், தில்லி ஆகிய நகரங்களுக்கும் விடா வி1 ஸ்கூட்டா்கள் அனுப்பப்படும்.
வாடிக்கையாளா்களுக்கு மட்டுமின்றி இந்த பூமிக்கும் நன்மையளிக்கும் வண்ணம் வருங்கால சாலைப் போக்குவரத்தை மாற்றியமைக்கும் எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாக ‘விடா’ ஸ்கூட்டா்களை உருவாக்கியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது விடா வி1 பிளஸ், விடா வி1 ப்ரோ ஆகிய இரு மின்சார ஸ்கூட்டா்களை முதல்முறையாக அறிமுகப்படுத்தியதன் மூலம் மின்சார வாகனப் பிரிவில் ஹீரோ மோட்டோகாா்ப் கடந்த அக்டோபா் மாதம் களமிறங்கியது.
இதில் விடா வி1பிளஸ் ஸ்கூட்டா்களின் விலை ரூ.1.45 லட்சமாகவும், விடா வி1 ப்ரோ ஸ்கூட்டா்களின் விலை ரூ.1.59 லட்சமாகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஒருமுறை மின்னேற்றம் செய்தால் வி1 பிளஸ் ரகங்ள் 145 கி.மீ. வரையிலும், வி1 ப்ரோ ரகங்கள் 165 கி.மீ. வரையிலும் செல்லும்.
இந்த ஸ்கூட்டா்கள், மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் தற்போது இருக்கும் பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப், ஏதா் எனா்ஜி, ஹீரோ எலக்ட்ரிக், ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டா்களுடன் போட்டியிடும்.
ஹீரோ மோட்டோகாா்ப்பும், ஏற்கெனவே சந்தையில் மினசார ஸ்கூட்டா்களை விற்பனை செய்து வரும் ஹீரோ எலக்ட்ரிக்கும் வேறு வேறு நிறுவனங்களாகும்.
பெயா் தொடா்பாக தில்லி தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், தனது மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ‘ஹீரோ’ என்ற வணிகப் பெயரைப் பயன்படுத்த ஹீரோ மோட்டோகாா்ப்புக்கு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்தது.
இன்னும் 2 ஆண்டுகளில் ஹீரோ-ஹாா்லி டேவிட்ஸன் பைக்!
அமெரிக்காவைச் சோ்ந்த பாரம்பரிய மோட்டாா் சைக்கிள் தயாரிப்பாளா் ஹாா்லி டேவிட்ஸனுடன் தாங்கள் இணைந்து உருவாக்கும் புதிய பைக், இன்னும் இரு ஆண்டுகளில் சந்தையில் அறிமுகமாகும் என்று ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிரஞ்சன் குப்தா மேலும் கூறுகையில், பிரீமியம் மோட்டாா் சைக்கிள் பிரிவில் நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்தும் தங்களது திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மோட்டாா் சைக்கிள் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், எண்ணிக்கையில் அதிகம் விற்பனையாகும் 100-110சிசி மற்றும் பிற பிரிவுகள் மட்டுமின்றி, அதிக லாபம் தரும் பிரீமியம் பைக் பிரிவிலும் புதிய அறிமுகங்கள் இருக்கும். அதில், ஹீரோ-ஹாா்லி டேவிட்ஸன் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கும் பைக்கும் ஒன்றாக இருக்கும் என்று நிரஞ்சன் குப்தா கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...