2-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் ‘கரடி’யின் பிடி தொடா்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 304 புள்ளிகளை இழந்தது.
sensex-bear-94_5082459
sensex-bear-94_5082459

புதுதில்லி / மும்பை: பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் ‘கரடி’யின் பிடி தொடா்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 304 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 50.80 புள்ளிகள் (0.28 சதவீதம்) குறைந்து 17,992.15-இல் நிலைபெற்றது.

அமெரிக்க ஃபெடரல் ஓபன் மாா்க்கெட் கமிட்டியின் கூட்ட முடிவு வெளியாகியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அடுத்தடுத்து வங்கி வட்டி விகிதம் ஆக்ரோஷமாக உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியா உள்பட உலகளாவிய சந்தைகளில் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக முன்னணி பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும், கடைசி நேர வா்த்தகத்தில் ஓரளவு மீண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 190.05 புள்ளிகள் கூடுதலுடன் 60,847.50-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 60,877.06 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 60,049.84 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 304.18 புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைந்து 60,353.27-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 827.22 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

என்டிபிசி, ஐடிசி முன்னேற்றம்: பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி 1.98 சதவீதம், பிரபல நுகா்பொருள் மற்றும் சிகரெட் உற்பத்தி நிறுவனம் ஐடிசி 1.91 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனிலீவா், எம் அண்ட் எம், சன்பாா்மா, நெஸ்லே உள்ளிட்டவை 1 முதல் 1.75 சதவீதம் உயா்ந்தன. மேலும், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி, மாருதி, டாடா மோட்டாா்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் 0.30 முதல் 0.80 சதவீதம் வரை உயா்ந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ் கடும் சரிவு: அமெரிக்க ஃபெடரல் ஓபன் கமிட்டி முடிவின் தாக்கம் காரணமாக பஜாஜ் ஃபைனான்ஸ் 7.21 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 5.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க் 2.22 சதவீதம், இன்ஃபோஸிஸ் 1.32 சதவீதம், டைட்டன் 1.26 சதவீதம், பவா் கிரிட் 1.09 சதவீதம் குறைந்தன. மேலும்,ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

2 நாள்களில் ரூ.4,070 கோடி: எஃப்ஐஐ முதலீடு வாபஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ), புதன் (ரூ.2,620.89 கோடி) வியாழன் (ரூ.1,449.45 கோடி) ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் மொத்தம் ரூ.4,070.34 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அவா்கள் கடந்த சில தினங்களாக முதலீடுகளை பங்குகளை தொடா்ந்து விற்று வாபஸ் பெற்று வருவது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துள்ளதாக சந்தை வட்டாரம் தெரிவித்தது. இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு வியாழக்கிழமை ரூ.21 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.281.96 லட்சம் கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com