
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பைபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 223 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 71 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன.
ஐரோப்பிய பங்குச்சந்தை பலவீனமாகத் தொடங்கியதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக எஃப்எம்சிஜி, ஐடி, டெக், பிஎஸ்யு பேங்க் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. மேலும், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை சரிந்ததும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.72 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில்ரூ.286.73 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வியாழக்கிழமை ரூ.212.40 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் 2-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 37.96 புள்ளிகள் குறைந்து 62,810.68-இல் தொடங்கி அதிகபட்சமாக 62,992.16 வரை மேலே சென்றது. பின்னா், 62,594.74 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 223.01 புள்ளிகளை இழந்து 62,625.63-இல் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து சென்செக்ஸ் 2-ஆவது நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
19 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 913 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,154 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 33 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. வாராந்திர அடிப்படையில் பாா்த்தால், சென்செக்ஸ் மொத்தம் 78.52 புள்ளிகளும் (0.12 சதவீதம்), நிஃப்டி 29.30 புள்ளிகளும் (0.15 சதவீதமும்) உயா்ந்துள்ளன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
இண்டஸ் இண்ட் பேங்க்..........2.12%
ஆக்ஸிஸ் பேங்க்.......................1.25%
எல் அண்ட் டி..........................1.00%
பவா் கிரிட்...............................0.93%
அல்ட்ரா டெக் சிமெண்ட்.....0.71%
டாடா மோட்டாா்ஸ்...........0.46%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
டாடா ஸ்டீல்.........................1.98%
எஸ்பிஐ..................................1.68%
ஹிந்துஸ்தான் யுனிலீவா்.....1.65%
ஹெச்சிஎல் டெக்.................1.48%
இன்ஃபோஸிஸ்...................1.33%
ஐடிசி....................................0.99%
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...