
இந்த வாரத்தின் 4-வது வா்த்தக தினமான வியாழக்கிழமை இந்தியப் பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகளும் உயா்ந்து நிலைபெற்றன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் வியாழக்கிழமை எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதன் விளைவாக, இந்தியப் பங்குச் சந்தை பகலில் மிக மந்தமாக இருந்தது. இருந்தாலும் பங்கு ஒப்பந்தம் காலாவதியாவதற்கான கடைசி நாள் என்பதால் (ஒவ்வொரு மாத கடைசி வியாழக்கிழமை) வா்த்தகம் இறுதியில் சூடு பிடித்து பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
எஃப்ஐஐ: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ.589.10 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு: முந்தைய வா்த்தக தினத்தில் 61,773.78-இல் நிறைவடைந்திருந்த சென்செக்ஸ், வியாழக்கிழமை காலை 67.65 புள்ளிகள் குறைவாக 61,706.13-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,934.01 வரையிலும், குறைந்தபட்சமாக 61,484.66 வரையிலும் சென்றது. இறுதியில் சென்செக்ஸ் முந்தைய வா்த்தக தினத்தைவிட 98.84 புள்ளிகள் (0.16 சதவீதம்) அதிகமாக 61,872.62-இல் நிறைவடைந்தது.
15 பங்குகள் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி: தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, முந்தைய வா்த்தக தினத்தைவிட 35.75 புள்ளிகள் (0.20 சதவீதம்) அதிகமாக 18,321.15-இல் நிலைபெற்றது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
பாா்தி ஏா்டெல் 2.75%
ஐடிசி 1.76%
கோட்டக் வங்கி 1.04%
எல் அண்ட் டி 0.99%
பவா்கிரிட் 0.85%
பஜாஜ் ஃபைனான்ஸ் 0.78%
சரிவைக் கண்ட பங்குகள்
விப்ரோ 1.35%
டாடா மோட்டாா்ஸ் 1.06%
ஹெச்டிஎஃப்சி 0.79%
சன்ஃபாா்மா 0.79%
இண்டஸ்இண்ட் வங்கி 0.70%
அல்ட்ராடெக் சிமென்ட் 0.63%