
புது தில்லி: இந்தியாவிலேயே ஆப்பிள் ஐஃபோன் தயாரிக்கப்பட்டும் கூட, அதன் விலை இங்கு குறையவில்லையே என்ற கேள்விக்கு பல பதில்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் பிற நாடுகளைவிட ஐஃபோன் 15 மாடல்களின் விலை உள்நாட்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது 7% ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்கிறது. இதில், ஐஃபோன் 15 மாடல்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டில் தயாரித்து உள்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதை காட்டிலும், உள்நாட்டிலேயே தயாரிக்கும் போது, ஐஃபோன் 15 மாடல்களின் விலை குறைவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அமெரிக்கா, துபை, சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாட்டின் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தொகையைவிட இந்தியாவில் அதிகமாகதான் விற்பனை செய்யப்படுகிறது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்கா, துபையில் ஐஃபோன் தயாரிக்கப்படுவதில்லை.
அதாவது, ஐஃபோன் 15 மாடல் ரூ. 79,900 -க்கும், ஐஃபோன் 15 பிளஸ் ரூ. 89,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மாடல் ரூ. 1,34,900-க்கும், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 1,59,900 -க்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டிலேயே தயாரித்தும் ஏன் விலை குறையவில்லை?
இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது. பொதுவாக செப்டம்பர் மாதம் என்றாலே, ஆப்பிள் ஐஃபோன் வாங்குபவர்களுக்கான திருவிழாக் காலம்தான். அந்த வேளையில்தான் பல புதிய ஐஃபோன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும். எனவே, புதிதாக அறிமுகமாகும் செல்லிடபேசியை வாங்குவோர்களும் இருப்பார்கள். புதிய அறிமுகத்தால் விலை குறையும் பழைய மாடல்களை வாங்குவோரும் காத்திருப்பார்கள்.
ஆனால், இவ்வளவுக்குப் பிறகு ஏன் ஐஃபோன் விலை குறையவில்லை. காரணம், ஆப்பிள் நிறுவனம், தனது ஐஃபோன்களை இந்தியாவில் அசெம்பிள்தான் செய்கிறது. ஐஃபோன்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதில்லை. உதிரிபாகங்களை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும்போது, சுங்கவரி செலுத்த வேண்டியது இருக்கும். இதுவே, ஆப்பிள் ஐஃபோனின் விலையைக் குறையவிடாமல் தடுக்கும் காரணியாக உள்ளது. இது மட்டுமல்லாமல், இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதனையும் வாங்குவோர்தான் செலுத்த வேண்டியதிருக்கும். கிட்டத்தட்ட சுங்க வரி என்ற பெயரில் 22 சதவீதத் தொகையை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கு செலுத்தும். அதுபோல 18 சதவிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதிருக்கும். இதுவே, ஒரு ஐஃபோன் விலையில் 40 சதவீதம் வந்துவிடும் என்றால், பிறகு அதன் விலை இந்தியாவில் எப்படி குறையும். ஒட்டுமொத்த சுமையில் ஆப்பிள் ஐஃபோன் விரும்பிகளின் முதுகில்தான் சுமத்தப்படும்.
ஏன், ஒட்டுமொத்த செலவையும் ஆப்பிள் நிறுவனம், வாடிக்கையாளர்களிடமே சுமத்துகிறது என்ற கேள்வி எழலாம். ஆனால், இவையெல்லாம் இந்தியாவில் ஐஃபோன் வாங்குவதற்கான செலவை அதிகரிக்கிறது என்கின்றன தரவுகள். இதுபோன்றவைதான், சில நாடுகளில் ஐஃபோன் விலை குறைவாக இருக்கக் காரணமாகவும் அமைந்துவிடுகின்றன. மறுபக்கம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் விலையை குறையவிடாமல் தடுக்கும் காரணிகளாக உள்ளன.
அனைத்துவிதமான வரிகளும் சேர்ந்து, விலையை குறையவிடாமல் தூக்கிப்பிடிக்கின்றன என்று சொல்கிறது தகவலறிந்த வட்டாரங்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...