சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்றுச் சாதனை!
புதிய நிதியாண்டின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. குறிப்பாக ஆசிய சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனா். இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை வலுப்பெற்றது. குறிப்பாக ஆட்டோ, எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. கடந்த 2023-24 நிதியாண்டில் சென்செக்ஸ் மொத்தம் 14,659.83 புள்ளிகள் (24.85 சதவீதம்), நிஃப்டி மொத்தம் 4, 967.15 புள்ளிகள் (28.61 சதவீதம்) உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.393.21 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.188.31 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,691.52 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் புதிய உச்சம்: காலையில் 317.27 புள்ளிகள் கூடுதலுடன் 73,968.62-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,254.62 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 73,909.39 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 363.20 புள்ளிகள் (0.49 சதவீதம்) கூடுதலுடன் 73,014.55-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,058 பங்குகளில் 3,235 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 665 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 158 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. ஸ்டீல் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (4.81 சதவீதம்), டாடா ஸ்டீல் (4.63 சதவீதம்) மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் (2.38 சதவீதம்), என்டிபிசி (1.88 சதவீதம்), எல் அண்ட் டி (1.66 சதவீதம்), ஹெச்டிஎஃப்சி பேங்க் (1.52 சதவீதம்) உள்பட மொத்தம் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டைட்டான், நெஸ்லே, பாா்தி ஏா்டெல், இண்டஸ் இண்ட் பேங்க், டெக் மஹிந்திரா, ஐடிசி உள்பட 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 135.10 புள்ளிகள் (0.61 சதவீதம்) உயா்ந்து 22,462.00-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,529.95 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் 31 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

