ஐடி, மின் துறை பங்குகளில் லாபப் பதிவு: 188 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

ஐடி, மின் துறை பங்குகளில் லாபப் பதிவு: 188 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை லாபப் பதிவால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 188 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன.

இருப்பினும் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது.

ஆட்டோ, ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், ஐடி, மெட்டல், மின்துறை பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. இதனால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக இறுதியில் ரூ.406.56 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.169.09 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.4,692.05 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் சரிவு:

சென்செக்ஸ் காலையில் 129.61 புள்ளிகள் கூடுதலுடன் 74,800.89-இல் தொடங்கி அதிகபட்சமாக 75,111.39 வரை மேலே சென்றது. வர்த்தகம் முடியும் தறுவாயில் ஐடி, மின்துறை பங்குகள் விற்பனை அதிகரித்ததால் சென்செக்ஸ் 74,346.40 வரை கீழே சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 188.50 புள்ளிகளை (0.25சதவீதம்) இழந்து 74,482.78-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,950 பங்குகளில் 1,822 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,995 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 133 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

17 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், சன்ஃபார்மா, டிசிஎஸ் உள்பட 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், பவர்கிரிட், இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், மாருதி உள்பட 13 பங்குகள்ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 39 புள்ளிகள் சரிவு:

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் 38.55 புள்ளிகள் (0.17 சதவீதம்) குறைந்து 22,604.85-இல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,783.35 வரை மேலே சென்றிருந்த நிஃப்டி, பின்னர் 22,568.40 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

இன்று விடுமுறை

மகாராஷ்டிர தினத்தை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு புதன்கிழமை (மே 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பங்கு வர்த்தகம் நடைபெறாது. வழக்கம் போல வியாழக்கிழமை பங்குச் சந்தை செயல்படும் என்று சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com