
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.287 கோடி ஆகும்.
இது தொடர்பாக வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவுகள் இயக்குநர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டன. அதை, தன்னிச்சை இயக்குநர் சி. சிரஞ்சீவிராஜ் அறிவித்தார். இந்த வங்கி அனைத்து அடிப்படை அளவீடுகளிலும் தொடர்ந்து வலுவான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது.
அந்த அறிக்கையின்படி, முதல் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.380 கோடியிலிருந்து ரூ.469 கோடியாகவும், நிகர லாபம் ரூ.261 கோடியிலிருந்து ரூ.287 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வட்டி வருவாய் ரூ.1,156 கோடியிலிருந்து ரூ.1,281 கோடியாகவும், வட்டி அல்லாத வருவாய் ரூ.167 கோடியிலிருந்து ரூ. 234 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
மொத்த வருவாய் ரூ. 1,323 கோடியிலிருந்து ரூ.1,515 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகளின் புத்தக மதிப்பு ரூ. 454-லிருந்து ரூ. 520-ஆக உயர்ந்துள்ளது. மொத்த வர்த்தகம் ரூ. 84,300 கோடியிலிருந்து ரூ.90,041 கோடியாக அதிகரித்துள்ளது. வாராக்கடன் விகிதம் 3.21 சதவீதத்திலிருந்து 2.55 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வங்கியின் செயல்திறனைப் பொருத்தவரை வைப்புத்தொகை, கடன்தொகை, நிகர லாபம், நிகர வட்டி ஆகியவற்றில் முந்தைய காலாண்டிலிருந்து 10 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. நிகர மதிப்பு ரூ.8,244 கோடியாக உயர்ந்துள்ளது.
முதல் காலாண்டில் தமிழகத்தில் 6 கிளைகள், பிற மாநிலங்களில் 4 கிளைகள் என மொத்தம் 10 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அந்நியச் செலாவணி செயல்பாடுகளுக்கான ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கியானது முந்தைய நிதியாண்டின் செயல்திறனுக்காக நடப்பு காலாண்டில் 8 அடல் பென்ஷன் யோஜனா விருதுகளை வென்றுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.