இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததற்கான 5 காரணங்கள்!
இந்திய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீட்டிற்கான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 3 சதவிகிதம் சரிந்தது, முதலீட்டாளர்களை அச்சத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்றது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களும், அமெரிக்கா பொருளாதாரமும் மந்த நிலையை நோக்கிச் செல்லும் நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை நோக்கிச் சென்றது. இது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக சென்செக்ஸ் 2,222.55 புள்ளிகள் குறைந்து 78,759.40ஆகவும், நிஃப்டி 662 புள்ளிகள் குறைந்து, 24,055.60 ஆகவும் முடிந்தது. அதே வேளையில் பிஎஸ்இ மிட்கேப் பங்குகள் 3.60 சதவிகிதமும், ஸ்மால்கேப் பங்குகளின் குறியீடு 4.21 சதவிகிதமும் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் முந்தைய அமர்வில் கிட்டத்தட்ட ரூ.457 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட ரூ. 442 லட்சம் கோடியாக குறைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் இன்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ரூ. 15 லட்சம் கோடி இழந்தனர்.
இந்திய பங்குச் சந்தைக்கு பெரும் இழப்புக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ள ஐந்து காரணங்கள் இங்கே:
அமெரிக்க மந்தநிலை அச்சம்
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படக் கூடும் என்ற அச்சம் உலகளவில் உள்ள முதலீட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 4.1 சதவிகிதத்திலிருந்து கடந்த மாதம், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மந்தநிலை அச்சங்களுக்கு மத்தியில், நிபுணர்கள் இந்த ஆண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதுகின்றனர். மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ், இந்த ஆண்டு செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒட்டுமொத்தமாக 100 பிபிஎஸ் (அடிப்படை புள்ளிகள்) விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றங்கள்
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை இஸ்ரேல் கொன்றதற்கு பழிவாங்குவோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இரு தரப்பிலிருந்தும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடி போர் குறித்த அச்சங்களை உயர்த்தியுள்ளன.
உயர் மதிப்பீடுகள்
இந்திய பங்குச் சந்தையின் தற்போதைய மதிப்பீடுகள் மிகவும் நீட்டிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் பங்குச் சந்தை ஆரோக்கியமான திருத்தத்திற்கு முதிர்ச்சியடைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
காலாண்டு முடிவுகள்
முதல் காலாண்டு முடிவுகள் ஏற்ற-இறக்கமாக உள்ள நிலையில், இது சந்தை உணர்வை உற்சாகப்படுத்தத் தவறிவிட்டது.
சந்தை மதிப்பீடு அதிகமாக இருப்பதால், வருவாய் தக்க வைக்க முடியாமல் போகலாம் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்பக் காரணிகள்
பங்குச் சந்தை 24,400 புள்ளிகளுக்கு மேல் நோக்கிச் சென்றால் சந்தை மீண்டும் ஏற்றம் காணும் என்ற நிலையில் 24,000 புள்ளிகளுக்கு கீழே சென்றால் மீண்டும் ஒரு ஆழமான திருத்தத்தை நோக்கி சந்தை செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.